மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 டிச 2018

கஜா: மத்திய அரசு ஒரு பைசாகூடத் தரவில்லை!

கஜா:  மத்திய அரசு ஒரு பைசாகூடத் தரவில்லை!

“கஜா புயல் நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசு தற்போது வரை ஒரு பைசாகூட வழங்கவில்லை” என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

கஜா புயலால் புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் தங்களது வாழ்வாதாரங்களான வீடு உள்ளிட்டவற்றை இழந்து தவித்துவருகின்றனர். புயல் தாக்கி 20 நாட்களாகியும் தற்போதுவரை இப்பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. வீடிழந்தவர்களுக்கு ஒரு லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையே மத்திய அரசிடம் இடைக்கால நிவாரண நிதியாக 1500 கோடி ரூபாய் கேட்டிருந்த நிலையில், 354 கோடியை ஒதுக்கியிருந்தது.

ஆனால், மத்திய அரசிடமிருந்து தற்போதுவரை கஜா புயல் நிவாரண நிதியாக ஒரு பைசாகூட வரவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

மதுரையில் இன்று (டிசம்பர் 7) நடைபெற்ற விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் உதயகுமார், அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், “தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து, மாநிலப் பேரிடர் நிவாரண நிதிக்கு பணம் அனுப்புவார்கள். அது நம் மாநிலத்துக்கு மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்புவர். அந்த அடிப்படையில் வரவேண்டிய நிலுவைத் தொகையைத்தான் தமிழகத்துக்கு மத்திய அரசு கொடுத்துள்ளது. கஜா புயல் நிவாரணப் பணிகளுக்கு இதுவரை மத்திய அரசு ஒரு பைசாகூடத் தரவில்லை” என்று கூறியுள்ளார்.

வெள்ளி, 7 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon