மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 டிச 2018

அரசு பஸ்களில் கட்டணக் குறைப்பு!

அரசு பஸ்களில் கட்டணக் குறைப்பு!

தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில், திங்கள் முதல் வியாழக்கிழமை வரை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. மாறாக, வெள்ளி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கட்டணமே வசூலிக்கப்படும் என்று அரசு போக்குவரத்துத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளிர் சாதன வசதி, படுக்கை மற்றும் இருக்கை வசதி கொண்ட 52 சொகுசுப் பேருந்துகளைக் கடந்த ஜூலை மாதம் முதல் இயக்கி வருகிறது தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம். தனியார் ஆம்னி பேருந்துகளை விட, இதில் அதிகக்கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார் எழுந்தது. இதனால் வார இறுதி நாட்களில் மட்டும் இப்பேருந்துகளில் கூட்டம் அலைமோதியது. மற்ற நாட்களில் வருவாய் இல்லாததால், பேருந்துக் கட்டணத்தைக் குறைக்க முடிவு செய்யப்பட்டது.

இதன்படி குளிர் சாதனப் பேருந்துகளில் 10 சதவீதக் கட்டணம் குறைக்கப்பட்டது. குளிர் சாதனப் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் ஒரு கிலோமீட்டருக்கு 20 பைசாவும், சாதாரண படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் ஒரு கிலோமீட்டருக்கு 10 பைசாவும் குறைக்கப்பட்டது. இதனால் 40 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை கட்டணம் குறைந்ததாகத் தெரிவித்துள்ளனர் பயணிகள். இது, நேற்று (டிசம்பர் 6) முதல் உடனடியாக அமல்படுத்தப்பட்டது.

வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகள் போலவே, அதிகளவில் பிரயாணம் மேற்கொள்ளும் பண்டிகை, திருவிழா நாட்களிலும் சொகுசுப் பேருந்துகளுக்கான கட்டணம் குறைக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிமியம் ரயில்கள், விமானச் சேவை போன்று இந்த சொகுசுப் பேருந்துகளின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. பயணிகள் ஏறவில்லை என்று அரசு சொகுசுப் பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுவந்த சூழலில், இந்த கட்டணக் குறைப்பு நடவடிக்கை மாற்றம் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படும் காரணத்தால் தான், அரசு சொகுசுப் பேருந்துகளைப் பயணிகள் நாடுவதாகத் தெரிவித்தார் தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றிவரும் ரஞ்சிதா. “அரசுப் பேருந்துகளில் தனியார் பேருந்துகளைவிடவும் கட்டணம் அதிகமிருந்தது. இப்போது, அந்த கட்டணத்தில் சிறு பகுதி குறைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், வெள்ளி முதல் ஞாயிறு வரை கட்டணம் மாற்றியமைக்கப்படவில்லை. பண்டிகை நாட்களில் ஆம்னி பேருந்துகளில் அதிகக் கட்டணம் வசூலிப்பதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்” என்று கேள்வி எழுப்பினார்.

வெள்ளி, 7 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon