மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 டிச 2018

எட்டாக் கனியாக வங்கிக் கடன்!

எட்டாக் கனியாக வங்கிக் கடன்!

தங்களுக்குக் கடன் வழங்கவே வங்கிகள் தயக்கம் காட்டுவதாக ஏற்றுமதியாளர்கள் அரசிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இந்திய ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சிலின் தலைவரான கணேஷ் குப்தா, தி ஏசியன் ஏஜ் ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில், “பொதுத் துறை வங்கிகளில் பணிபுரியும் நிர்வாக இயக்குநர்கள், பொது மேலாளர்கள், பொது துணை மேலாளர்கள் ஆகியோர் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்கள் அணுகும்போது சரியான பதிலளிக்கவோ அவர்களுக்கு உதவவோ முன்வருவதில்லை. இதனால் ஏற்றுமதியாளர்கள் தங்களுக்கான ஆர்டர்களைப் பெறுவதில் மிகவும் சிரமப்படுகிறார்கள். ஏற்றுமதித் துறையில் உள்ள பிரச்சினைகள், அதில் உள்ள சவால்கள் மற்றும் நிதி நெருக்கடி ஆகியவை குறித்து ஆலோசிக்கவும் ஏற்றுமதியாளர்களால் முடிவதில்லை.

இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சரான சுரேஷ் பிரபு மேற்கொண்டு வருகிறார். ஆனால், ஏற்றுமதியாளர்களுக்குப் போதிய கடனுதவியைக் குறைந்த கட்டணத்தில் வங்கிகள் வழங்கி உதவாவிட்டால் அமைச்சரின் இந்த முயற்சிகள் சாத்தியமாகாது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடி ரூ.13,700 கோடிக்கு மேல் மோசடி செய்த பிறகிலிருந்து ஏற்றுமதியாளர்களுக்குக் கடன் வழங்கவே வங்கிகள் தயங்குவதாக ஏற்றுமதியாளர்கள் புகார் கூறுகின்றனர். ஒருவர் செய்த மோசடிக்காக அனைவரையும் சந்தேகத்துடன் பார்ப்பது சரியா என்று ஏற்றுமதியாளர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

ஒருபுறம், இந்தியாவில் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்த பணமில்லா பரிவர்த்தனைகளை அரசு ஊக்குவித்து வருகிறது. ஆனால் மறுபுறமோ, ரூ.1 கோடி முதல் ரூ.5 கோடி வரையில் கடன் பெறுவதற்குக் கூட கட்டுக்கட்டான ஆவணங்களை வங்கிகள் ஏற்றுமதியாளர்களிடம் கேட்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 7 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon