மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 டிச 2018

இவர்களால்தான் ஸ்டாலினுக்குத் தலைவலி: தமிழிசை

இவர்களால்தான் ஸ்டாலினுக்குத் தலைவலி: தமிழிசை

“விசிக, மதிமுகவின் பிரச்சினை ஸ்டாலினுக்கு மிகப்பெரிய தலைவலியாக வரப்போகிறது” என்று தமிழிசை விமர்சித்துள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டுவில் அணை கட்டுவதற்கான விரிவானத் திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள ஆணையம் கடந்த மாதம் அனுமதியளித்தது. இதற்கு தமிழகத்திலிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின. அனுமதியை திரும்பப் பெற வேண்டுமென நேற்று நடைபெற்ற சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் இயற்றப்பட்டு, அது பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை தி.நகரில் இன்று (டிசம்பர் 7) செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “கஜா புயல் நிவாரணத்தை பல எதிர்க்கட்சிகள் அரசியலாக்கிவருகின்றனர். திருச்சியில் அத்தனை பேரை அழைத்துச் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தும் எதிர்க்கட்சிகள், நிவாரணப் பணிகளையும் இவ்வளவு பேரை அழைத்துச் சென்று செய்திருக்க வேண்டியதுதானே” என்று விமர்சித்தார்.

மேகதாட்டு பிரச்சினை குறித்து பாஜகவுக்கு கவலையில்லாதது போல எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துவருகின்றனர் என்று குற்றம் சாட்டிய தமிழிசை, “காவிரியாக இருந்தாலும், மேகதாட்டுவாக இருந்தாலும் தீர்வு கிடைக்கும் வரை பாஜக போராடும். அணை கட்ட அனுமதி கொடுக்கப்படவில்லை. மேகதாட்டுவில் ஆய்விற்கு கொடுக்கப்பட்டுள்ள அனுமதியையே, அணை கட்டியது போல முன்னிறுத்துகிறீர்கள் என்றால், துணை முதல்வராக இருந்தபோது மீத்தேன் திட்ட ஆய்விற்கு ஸ்டாலின் கையெழுத்திட்டார். அப்படியெனில் மீத்தேன் எடுப்பதற்குதான் ஸ்டாலின் கையெழுத்திட்டாரா” என்ற கேள்வியை முன்வைத்தார்.

எங்கள் மீது வீசப்படும் சேற்றை எடுத்துவைத்தாவது, அதில் செந்தாமரையை மலரச் செய்வோம். தாமரை மலர்கிறதா இல்லையா என்பது குறித்து இவர்களுக்கு என்ன பதற்றம் என்று தெரியவில்லை என விமர்சித்த தமிழிசை, திமுக கூட்டணி குறித்தும் கருத்து தெரிவித்தார்.

“வைகோ முதலில் துரைமுருகனிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். அன்பழகனின் கருத்துக்கு எதிர்க்கருத்து சொல்லிக்கொண்டிருந்தார். தற்போது வன்னியரசு ஒரு பதிவை இட, அதற்காக திருமாவளவனிடம் சண்டையிட ஆரம்பித்தார். ஆனால் அது கட்சியின் கருத்தல்ல என்று திருமாவளவன் கூறிவிட்டார். இவர்களின் சண்டையும், இவர்களை கூட்டணியில் வைத்திருப்பதும் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய தலைவலியாக வரப்போகிறது” என்று அவர் தெரிவித்தார்.

வெள்ளி, 7 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon