மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 டிச 2018

சமந்தாவின் கொண்டாட்டம் ஆரம்பம்!

சமந்தாவின் கொண்டாட்டம் ஆரம்பம்!

சமந்தாவுக்கு சிறப்பான வருடமாக 2018ஆம் ஆண்டு அமைந்தது. இந்த வருடத்தை அட்டகாசமாகக் கொண்டாடி வழியனுப்பி வைத்துவிட்டு, 2019ஆம் ஆண்டினை ஆரவாரத்துடன் வரவேற்க சமந்தா தயாராகிவிட்டார். ஒவ்வொரு வருடமும் தவறாமல் கொண்டாடிவிடும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான ஏற்பாடுகள் சமந்தா வீட்டில் தொடங்கிவிட்டன.

சமந்தாவின் நெருங்கிய நண்பர்களான மாடல் நடிகை சாதனா சிங் மற்றும் அலங்கார நிபுணர் பிரீதம் ஜுகால்கர் ஆகியோருடன் அவரது கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தொடங்கியிருக்கிறது. கிறிஸ்துமஸ் மரம், அதைச் சுற்றி கலர்ஃபுல்லான லைட்டுகளை வைத்து அலங்கரிப்பதற்கான வேலைகளில் இந்த மூவரும் இறங்கியிருக்கின்றனர். சமந்தாவுக்கு நெருக்கமான நண்பர் பட்டாளத்தை வரவேற்று இவ்வருட கிறிஸ்துமஸ் பண்டிகைக் கொண்டாடப்பட முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. கிறிஸ்துமஸ் ஏற்பாடுகளின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டகிராமில் பகிர்ந்து “அழகான நண்பர்களுடன் என் வருடாந்திரக் கொண்டாட்டமும் தொடங்கிவிட்டது. வருடத்தின் அழகான மாதம் இது” எனக் குறிப்பிட்டிருக்கிறார் சமந்தா.

சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் திருமணம் செய்ய முடிவெடுக்கப்பட்டபோது, பூஜை நடத்தி சில பரிகாரங்களை செய்தது நாகார்ஜுனாவின் குடும்பம். அப்போது சமந்தாவுக்கு தோஷம் கழித்து மதம் மாற்றிவிட்டார்கள் எனக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதற்கு சமந்தாவும் சம்மதித்திருக்கக் கூடாது என கருத்து சொல்லப்பட்டது. ஆனால், தனது திருமணத்தை இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடத்தியதுடன், அதன் பிறகான அனைத்து பண்டிகைகளையும் இரு குடும்பத்தாரின் மகிழ்ச்சியையும் மனதில் கொண்டு கொண்டாடுவதுடன், அதேசமயம் தனது விருப்பங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் சமந்தா.

வெள்ளி, 7 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon