மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 டிச 2018

பட்டியலினக் கட்சிகள் கூட்டணி அமைக்க வேண்டும்: இரஞ்சித்

பட்டியலினக் கட்சிகள் கூட்டணி அமைக்க வேண்டும்: இரஞ்சித்

வரும் மக்களவைத் தேர்தலில் பட்டியலின கட்சிகள் கூட்டணி அமைத்து 7 தனித் தொகுதிகளிலும் போட்டியிட வேண்டுமென இயக்குனர் பா.இரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை அடையாறிலுள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில், அம்பேத்கர் நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று (டிசம்பர் 6) நடைபெற்றது. நிகழ்வில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், இந்திய குடியரசுக் கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன் ஆகியோர் கலந்துகொண்டனர். பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் தயாரிப்பாளர் இரஞ்சித், இயக்குனர் மாரி செல்வராஜ் ஆகியோருக்கு நிகழ்வில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

நிகழ்வில் பேசிய இரஞ்சித், “பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த எம்.பி.க்களும் எம்.எல்.ஏ.க்களும் இணைந்து நந்தீஸ்-சுவாதி படுகொலை குறித்து குறைந்தபட்சம் கண்டனக் குரல் கூட ஏன் எழுப்பவில்லை. நீங்கள் இருக்கும் கட்சி உங்களை பேசவைக்காது. யாரால் மக்கள் மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டீர்களோ, அவர்களைப் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லையெனில் நீங்கள் எதற்கு பட்டியலினத்திலிருந்து எம்.எல்.ஏ.வாக எம்.பி.யாக ஆக வேண்டும். ஏன் இதுவரை பேசவில்லை? பட்டியலின மக்களுக்காகப் பேசக் கூடாது என்று உங்கள் கட்சி உங்களைத் தடுக்கிறதா? அப்படியெனில் பொதுத் தொகுதியில் நின்று வெற்றிபெறுங்கள். நான் கேட்கும் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்” என்று பட்டியலின எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்குக் கேள்வி எழுப்பினார். அப்படிப் பேசினால் கட்சியை விட்டு நீக்கிவிடுவோம் என்று கூறினால், வெளியே வாருங்கள், நாங்கள் உங்களை வெற்றி பெற வைக்கிறோம் என்றும் கூறினார்.

மேலும், “பட்டியலினத்தின் வாய்ப்பைப் பயன்படுத்தித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், பட்டியலின மக்களின் பிரச்சினைகள் குறித்து குறைந்தபட்சம் ஆதரவு தெரிவிக்கக்கூட மறுக்கிறார்கள். அவர்களுக்கு ஓட்டு போட வேண்டிய அவசியம் இல்லை. பட்டியலின மக்களின் பிரச்சினைகளை பேசுவோரை நாம் சட்டமன்றம், நாடாளுமன்றத்திற்கு அனுப்புவோம். 234 தொகுதிகளிலும் வேலை செய்ய வேண்டாம், குறைந்தபட்சம் தனித் தொகுதிகளில் மட்டும் வேலை செய்வோம்” எனத் தெரிவித்த இரஞ்சித்,

“வரும் மக்களைவைத் தேர்தலில் 7 தனித் தொகுதிகளில் மட்டும் வேலை செய்வோம். தலித் அமைப்புகளுக்குள் ஒரு கூட்டணியை உருவாக்கி, அங்கு தேர்தலில் போட்டியிட வைப்போம். ஏழு தொகுதிகளிலும், ஏழு கட்சிகள் ஒவ்வொரு இடங்களில் நிற்கட்டும். ஏழு கட்சியினரும் ஏழு தொகுதிகளில் வேலை செய்யலாம். தேர்ந்தெடுக்கப்படும் ஏழு பேரும் பட்டியலின மக்களுக்காகக் கண்டிப்பாக பேசித்தானே ஆக வேண்டும்” என்று ஆவேசமாகப் பேசினார். இந்தியாவின் தேசத்தந்தை காந்தி அல்ல, அம்பேத்கர்தான் என்றும் அவர் கூறினார்.

இதற்கு எதிர்வினையாற்றியுள்ள விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமார், “எஸ்சி கட்சிகள் சேர்ந்து சாதி அடிப்படையில் கூட்டணி அமைக்க வேண்டும்' என்ற பேச்சு ஆபத்தானது. அது தலித்துகளுக்கு எதிரான திரட்சிக்கே வழி வகுக்கும். சாதியாகத் திரள வேண்டும் என்பது சனாதனவாதிகளின் ஆலோசனை. பாமகவை வைத்து செய்த சோதனையை இப்போது தலித் கட்சிகளை வைத்துச் செய்யப் பார்க்கிறார்களா?” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

வெள்ளி, 7 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon