மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 டிச 2018

ரேஷன் அரிசி கடத்தல்: தீர்ப்பு ஒத்திவைப்பு!

ரேஷன் அரிசி கடத்தல்: தீர்ப்பு ஒத்திவைப்பு!

குண்டர் சட்டம் உள்ளிட்ட தடுப்புக் காவல் சட்டங்களின் கீழ் சிறையில் அடைக்கப்படுவதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகளில் ஆஜராக சிறப்பு அரசு வழக்கறிஞர்களை நியமிக்கலாமே என்று சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

ரேஷன் அரிசி கடத்தியதாக வேலூரைச் சேர்ந்த அமர்நாத் என்பவர், தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். இதனை எதிர்த்து அவரது மனைவி சவுஜன்யா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு, கடந்த 10 ஆண்டுகளில் ரேஷன் அரிசி கடத்தியதாக எத்தனை பேர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், அதில் எத்தனை உத்தரவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன, அதற்கான காரணம் என்ன என்று சிவில் சப்ளைஸ் சிஐடி பிரிவு அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு இன்று (டிசம்பர் 7) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிவில் சப்ளைஸ் சிஐடி பிரிவினர் அறிக்கை தாக்கல் செய்தனர். 2017ஆம் ஆண்டில் 87 பேர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதாகவும், அவர்களில் 18 பேரை அறிவுரைக் கழகமும், 67 பேரை உயர் நீதிமன்றமும் விடுவித்து விட்டதாகவும், 2 பேர் மட்டும் சிறையில் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆண்டில் இதுவரை 53 பேர் கைதாகினர். இவர்களில் 10 பேரை அறிவுரைக் கழகமும், 42 பேரை உயர் நீதிமன்றமும் விடுவித்து விட்டதாகக் கூறப்பட்டது.

அறிக்கையை ஆராய்ந்த நீதிபதிகள், தடுப்புக் காவல் சட்டத்தின்படி கைது செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்யக் கோரி கைதானவர்களின் தரப்பில் கொடுக்கப்பட்ட விண்ணப்பங்கள் மீது அரசு தாமதமாக முடிவெடுத்ததே பெரும்பாலானவர்கள் விடுவிக்கப்பட்டதற்குக் காரணமாக இருப்பதைச் சுட்டிக்காட்டினர். இதைத் தவிர்க்க குண்டர் சட்ட வழக்குகளில் கைதேர்ந்தவரை அரசு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கலாமே என நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர்.

இதற்கு விளக்கமளித்த அரசு வழக்கறிஞர் நூறு சதவீதம் முழுமையான தடுப்புக் காவல் உத்தரவை அரசு பிறப்பித்தாலும், சாதாரண காரணங்களுக்காக (Fullstop, Comma mistakes) அது ரத்து செய்யப்படுகிறது என்று கூறினார். இதையடுத்து அமர்நாத் மனைவி சவுஜன்யா தொடர்ந்த மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

வெள்ளி, 7 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon