மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 டிச 2018

மயங்கி விழுந்த மத்திய அமைச்சர்!

மயங்கி விழுந்த மத்திய அமைச்சர்!

மகாராஷ்டிராவில் பட்டமளிப்பு விழா ஒன்றில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மயங்கி விழுந்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம், அகமத் நகரில் உள்ள மகாத்மா பூலே வேளாண் பல்கலைக் கழகத்தில் இன்று (டிசம்பர் 7) பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, தமிழகத்தின் முன்னாள் பொறுப்பு ஆளுநரும் மகாராஷ்டிரா ஆளுநருமான வித்யாசாகர் ராவ்‌ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் அரை மணி நேரம் கட்கரி உரையாடியுள்ளார். பின்னர் அவருக்குத் தலை சுற்றல் ஏற்பட்டுள்ளது. இருக்கையில் அமர்ந்த அவருக்கு ஆளுநர் வித்யாசகர் ராவ் சாக்லேட் ஒன்றைக் கொடுத்துள்ளார். தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டவுடன் அனைவரும் எழுந்து நின்றனர். எழுந்து நின்ற சிறிது நேரத்திலேயே நிதின் கட்கரி கண்கள் சொருகியபடி மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரை அருகில் நின்று கொண்டிருந்த ஆளுநரும், பாதுகாப்பு அதிகாரிகளும் தாங்கிப்பிடித்தவாறு கீழே அமர வைத்துள்ளனர்.

இதையடுத்து அவர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவத்தால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சிகிச்சைக்குப் பிறகு நிதின் கட்கரி தனது ட்விட்டர் பக்கத்தில், ”சர்க்கரை நோய் காரணமாகத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மருத்துவரைச் சந்தித்தபின் நலமாக உள்ளேன். என் நலன் விரும்பிகள் அனைவருக்கும் நன்றிகள்” என்று பதிவிட்டுள்ளார்.

வெள்ளி, 7 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon