மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 டிச 2018

மருத்துவர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்!

மருத்துவர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்!

வருகிற 17ஆம் தேதி வரை தங்களது போராட்டத்தை நிறுத்தி வைப்பதாக, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 4ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான சம்பளத்தை வழங்க வேண்டும் என்பது உட்படப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக அவர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால், தமிழகமெங்கும் அரசு மருத்துவமனைகளில் புற நோயாளிகள் பிரிவு கடுமையாகப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால், வரும் 8ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை ஏற்கனவே திட்டமிட்ட அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளப் போவதில்லை என்று அரசு மருத்துவர்கள் சங்கக் கூட்டமைப்பு தெரிவித்தது. இந்த நிலையில், மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டுமென்று கோரி, நேற்று (டிசம்பர் 6) சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்தார் மதுரை கோமதிபுரத்தைச் சேர்ந்த முகமது யூனிஸ் ராஜா. நோயாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, இப்போராட்டத்தை அனுமதிக்கக் கூடாது என்று, அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இன்று (டிசம்பர் 7) இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக சுகாதாரத் துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டிருப்பதாகவும், சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கஜா புயல் நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவர்கள் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தையும் பதவி உயர்வையும் தர வேண்டுமென்று மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை விடுப்பதாகத் தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக தமிழகச் சுகாதாரத் துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டனர்.

இதையடுத்து, டிசம்பர் 17ஆம் தேதி வரை போராட்டத்தை நிறுத்தி வைப்பதாக அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டது.

வெள்ளி, 7 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon