மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 டிச 2018

கலைஞர் சிலை திறப்பு: ரஜினி, கமல் செல்வார்களா?

கலைஞர் சிலை திறப்பு: ரஜினி, கமல் செல்வார்களா?

டிசம்பர் 16 ஆம் தேதி தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுகவின் ஐம்பதாண்டு கால தலைவராக இருந்து மறைந்தவருமான கலைஞரின் உருவச் சிலை, திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் திறக்கப்பட இருக்கிறது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி சிலையைத் திறந்து வைக்க இருக்கிறார்.

ஆந்திர முதல்வர், சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுவை முதல்வர் நாராயணசாமி போன்ற பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இந்த நிகழ்வுக்கு வர இருக்கும் நிலையில்... ரஜினி, கமல் ஆகியோர் வருவார்களா என்பதே தமிழ்நாடு அரசியல் களத்தின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது. இருவரும் தற்போது அரசியல் உலகத்தில் இருப்பதால் இந்த எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

கலைஞர் சிலை திறப்பு நிகழ்வின் அழைப்பிதழ் ரஜினி, கமல் இருவருக்கும் திமுக சார்பில் நேரடியாகக் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இருவரது வட்டாரங்களிலும் அவர்களது வருகை பற்றி விசாரித்தோம்.

ரஜினி ஆலோசனை

கலைஞர் சிலை திறப்பு விழாவுக்கு செல்வது பற்றி ரஜினி தனது நெருக்கமான சிலரிடம் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

தான் எந்த விழாவில் கலந்துகொண்டாலும் அங்கே கலைஞரைப் பற்றி பேச நேர்ந்தால், ‘தென்னிந்தியாவின் மூத்த தலைவர்’ என்ற அடைமொழியோடுதான் ரஜினி விளிப்பார். அந்த அளவுக்கு கலைஞர் மேல் மரியாதை உள்ளவர். கலைஞர் மறைவுக்குப் பின் அவருக்கு காமராஜர் அரங்கில் திரையுலகின் சார்பில் நடத்தப்பட்ட நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்ட ரஜினி, “கலைஞர் இல்லாத தமிழ்நாட்டை இனிமேல் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை” என்று பேசினார் .

ஆனால் அண்மையில் முரசொலியில் ரஜினி பற்றி வந்த ஒரு நையாண்டிக் கட்டுரை ரஜினியை ரொம்பவே கோபப்பட வைத்துவிட்டது. ஆனாலும் அதன் பின் ஸ்டாலின் மேற்கொண்ட சில சமாதானங்களால் அதை ரஜினி விட்டுவிட்டார்.

இந்நிலையில் கலைஞர் சிலை திறப்பு விழாவுக்கு செல்வது பற்றி தனக்கு நெருக்கமான சிலரிடம் ரஜினி ஆலோசித்திருக்கிறார். “கலைஞரின் சிலையை சோனியா காந்தி திறந்து வைக்கிறார்.நீங்கள் இப்போது மோடிக்கு ஆதரவான ஒரு நிலை எடுத்துள்ளீர்கள். இந்நிலையில் சோனியா காந்தி பங்கேற்கும் நிகழ்வில் பங்கேற்க வேண்டுமா?’ என்பது பற்றி யோசித்து முடிவெடுங்கள். ஒருவாழ்த்து செய்தி அனுப்பிவிட்டு, பின்னால் போய் கலைஞர் சிலையை பார்த்து மரியாதை செய்யலாம். இனி எல்லாவற்றையுமே நீங்கள் அரசியல் கண் கொண்டுதான் பார்க்க வேண்டும்” என்று சில ஆலோசகர்கள் கூறியுள்ளனர். ரஜினி இதுபற்றி ஏதும் பதில் சொல்லவில்லையாம்.

கமல்ஹாசன்

கமல்ஹாசன் கலைஞர் சிலை திறப்பு விழாவுக்கு செல்வதில் தனக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று நினைக்கிறார். மேலும் இது அரசியலுக்கு அப்பாற்பட்ட விஷயமாக அவர் கருதுகிறார். தனக்கு கலைஞானி என்று பட்டம் கொடுத்த கலைஞரை, சிலை ஞானியாக பார்க்கும் விழாவில் கலந்துகொள்ள கமல் விரும்புகிறார். தேசிய அளவில் கமலின் நண்பர்களும் விழாவுக்கு வருகிறார்கள். எனவே கமல் விழாவுக்கு நிச்சயமாக செல்வார் என்கிறார்கள் மக்கள் நீதி மய்ய வட்டாரத்தில்.

வெள்ளி, 7 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon