மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 டிச 2018

‘ஹெட்’ தலையில் பெரும் பொறுப்பு!

‘ஹெட்’ தலையில் பெரும் பொறுப்பு!

இந்தியா – ஆஸி டெஸ்ட் இரண்டாம் நாள் ஆட்டம்!

சத்தேஸ்வர் புஜாராவின் உறுதியும் நிதானமும் நேற்று இந்தியாவைக் கரை சேர்த்தன என்றால் இன்று ரவிச்சந்திரன் அஸ்வினும் இஷாந்த் ஷர்மாவும் இந்தியாவின் நிலையை வலுவாக்கினார்கள். துல்லியமான பந்து வீச்சின் மூலம் ஆஸ்திரேலியாவைத் திணறவைத்த இவர்கள் 127 ரன்களை எடுப்பதற்குள் 6 விக்கெட்களை வீழ்த்தி, ஆஸி இன்னிங்ஸின் இறுதிக் கட்டத்தைத் தொடங்கிவைத்தார்கள்.

ஆனால், அவ்வளவு சுலபமாகப் பணிந்துவிடுவதுதான் ஆஸ்திரேலிய அணிக்குப் பழக்கமில்லையே. முதல் வரிசை ஆட்டக்காரர்கள் வீழ்ந்தாலும் விடாப்பிடியாகக் களத்தில் நிற்கிறார் ட்ராவிஸ் ஹெட். ஆறாவது மட்டையாளராகக் களம் இறங்கும் இவர், முன்னணி மட்டையாளர்கள் அனைவரும் ஆட்டமிழந்த நிலையில் பந்து வீச்சாளர்களின் துணையோடு இந்தியாவின் ஸ்கோரை (250 ஆல் அவுட்) நோக்கி மெல்லத் தன் அணியை முன்னோக்கிச் செலுத்திவருகிறார்.

முதல் ஓவரிலேயே ஷர்மாவின் பந்து வீச்சில் முதல் விக்கெட் விழுந்தது. அடுத்த விக்கெட் விழக் கிட்டத்தட்ட 20 ஓவர்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால், விக்கெட் விழாத நிலையில் ரன்களைக் கட்டுப்படுத்தும் வேலையை இந்திய வீச்சாளர்கள் செவ்வனே செய்தார்கள். மார்க்கஸ் ஹாரிஸும் ஷான் மார்ஷும் நெடுநேரம் நீடிக்கவில்லை. எனினும் உஸ்மான் கவாஜா பொறுமையை ஆயுதமாகக் கொண்டு களத்தில் நின்றார். 125 பந்துகளை எதிர்கொண்டு 28 ரன் எடுத்திருந்த அவரை அஸ்வின் பெவிலியனுக்கு அனுப்பினார். 93 பந்துகள் தாக்குப்பிடித்த பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப் ஜஸ்ப்ரீத் பும்ராவின் முதல் விக்கெட்டாக மாறினார். அடுத்த இரண்டு ஓவர்களுக்குள் கேப்டன் டிம் பைனேவை ஷர்மா வீழ்த்தினார். ஆஸ்திரேலிய அணி நெருக்கடியில் சிக்கியது.

இந்த நெருக்கடி எதையும் தன் தலைக்கு ஏற்றிக்கொள்ளாமல் உறுதியாக ஆடிக்கொண்டிருந்த ஹெட், இரண்டாம் நாள் ஆட்டம் முடியும் போது 149 பந்துகளை எதிர்கொண்டு 61 ரன்களுடன் களத்தில் நிற்கிறார். அணி 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்களை எட்டியிருக்கிறது. மீதி இருக்கும் பந்து வீச்சாளர்களை வைத்துக்கொண்டு ஹெட் இன்னும் எவ்வளவு ரன்களை எடுப்பார் என்பது இந்தப் போட்டியின் போக்கைத் தீர்மானிக்கும் காரணியாக அமையும்.

ஆஸ்திரேலிய அணியை 210 - 220 ரன்களுக்குள் சுருட்டினால் இந்தப் போட்டியை வெல்வது குறித்து இந்திய அணி கனவு காணலாம். கடைநிலை மட்டையாளர்களை அதிக நேரம் ஆட விட்டால் அதுவே போட்டியைத் தாரைவார்த்துக் கொடுப்பதற்கு வழி வகுத்துவிடும்.

வெள்ளி, 7 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon