மின்னம்பலம்
தஞ்சை பெரிய கோயிலில் வாழும் கலை அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தியான நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.
தஞ்சை பெரிய கோயிலில் ‘விஞ்ஞான பைரவம்’ என்ற தலைப்பில், இன்று (டிசம்பர் 7) ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தலைமையில் தியான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை எதிர்த்து பெரிய கோயில் முன்பு தமிழ் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியால் கோயிலின் புராதனம் கெடும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்பே யமுனை நதிச் சமவெளிகளில் வாழும் கலை அமைப்பு நடத்திய தியான நிகழ்ச்சியால் அப்பகுதியின் சுற்றுச்சூழலில் கடும் சேதம் ஏற்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அந்த நிகழ்ச்சியில் சுமார் 35 லட்சம் நபர்கள் கலந்துகொண்டனர். சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட சேதத்தைச் சரிகட்டுவதற்காக வாழும் கலை அமைப்புக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் 5 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.
இதேபோல தஞ்சை பெரிய கோயிலில் நடத்தப்படும் நிகழ்ச்சியால் கோயிலின் புராதனம் சீர்குலையும் எனவும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் எனவும் தற்போது போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு தொல்லியல் துறையும் அனுமதியளித்துள்ளது. யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமான தஞ்சாவூர் பெரிய கோயிலில் தனியார் நிகழ்ச்சிகள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனை மீறித் தொல்லியல் துறை அனுமதி அளித்திருப்பது சர்ச்சையை எழுப்பியுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் முத்துகிருஷ்ணன் என்பவர் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு அவசர வழக்காக இன்று மதியமே விசாரிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.