மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 24 ஜன 2021

முரண்டு பிடித்த தனுஷ், வளைந்து கொடுத்த விஷால்

முரண்டு பிடித்த தனுஷ், வளைந்து கொடுத்த விஷால்வெற்றிநடை போடும் தமிழகம்

இராமானுஜம்

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கடந்த புதன் (டிசம்பர் 5) அன்று புதிய திரைப்படங்களின் வெளியீட்டுக் குழு கூட்டம் நடைபெற்றது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் பல தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டனர். அதில், வருகிற டிசம்பர் 14ஆம் தேதி அன்று நிறையத் திரையரங்குகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் ஒரு சில திரைப்படங்கள் வெளிவரலாம் என்று பேசப்பட்டது.

மேலும், ஒரே தேதியில் நிறையத் திரைப்படங்கள் வெளிவருவதால் ஏற்படும் பிரச்சினை குறித்தும், பாதிப்புகள் குறித்தும் பேசப்பட்டது. ஆனால் எந்த தாயரிப்பாளரும் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில் வருகிற டிசம்பர் 21 மற்றும் ஜனவரி 10ஆம் தேதிகளில் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் அனைவரும் தங்களது திரைப்படங்கள் விடுமுறை தினத்தன்று (festival date)தான் வெளிவர வேண்டும் என்றும் அவ்வாறு வெளிவந்தால் தங்களுக்கு எந்தவித நஷ்டமும் ஏற்படாது என்றும் முடிவெடுத்து அவர்கள் விரும்பிக் கேட்டுக்கொண்டதன் பேரில் தயாரிப்பாளர்கள் சங்கம் மேற்கண்ட கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் ஆகிய இரு பண்டிகைகளில் தயாரிப்பாளர்களின் விருப்பத்திற்கேற்ப அவர்களது திரைப்படங்களை வெளியீட்டுக் கொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளது. அது தொடர்பான அறிக்கை ஒன்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

சங்கத்தில் கடந்த 6 மாதங்களாக கடைப்பிடித்து வந்த கட்டுப்பாட்டை கைவிடக் காரணம் நடிகர் தனுஷ் தான் என்கிறார்கள் சிறு படத் தயாரிப்பாளர்கள். சங்கம் ஏற்கெனவே அனுமதி கொடுத்திருந்த படங்களில் தனுஷ் நடித்திருக்கும் மாரி 2 இல்லை. முறைப்படி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ரிலீஸ் தேதி ஒதுக்கீடு செய்ய விண்ணப்பிக்கவும் இல்லை. தன்னிச்சையாக டிசம்பர் 21 அன்று மாரி 2 ரிலீஸ் என தனுஷ் அறிவித்தார்.

அந்தத் தேதி ஒதுக்கப்பட்ட படங்களின் தயாரிப்பாளர்கள், மாரி - 2 தன்னிச்சையாக எப்படி வரலாம் என சங்கத் தலைவர் விஷாலுக்கு நெருக்கடி கொடுத்தனர். தனுஷ் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் எந்த ஆலோசனையையும் ஏற்க மறுத்தார். ஒரு கட்டத்தில் எனது படத்தை எப்போது ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதைச் சங்கம் தீர்மானிக்க முடியாது என்றாராம். இதனால் தனுஷ் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் எனக் கூறப்பட்டது. விஷால் அப்படி ஒரு முடிவை எடுக்கிற அளவுக்கு தில்லான தலைவர் இல்லை எனத் தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறப்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் மாலையில் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள மாரி 2 தயாரிப்பாளரும் நடிகருமான தனுஷுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பிற தயாரிப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். தனுஷ் தரப்பில் இருந்து யாரும் வரவில்லை.

விஷால் தலைமையை பலவீனப்படுத்தக் காத்திருந்த தனுஷ் மாரி 2 படத்தின் மூலம் சங்க முடிவை மீறிப் படத்தை ரிலீஸ் செய்வதை தடுக்கவோ, நடவடிக்கை எடுக்கவோ முடியவில்லை.

இதனால் தனது பலவீனத்தை மறைக்கக் கழுவிய மீனில் நழுவுகிற மீனாக பண்டிகை நாளில் எல்லோரும் வரவிரும்புவதால் என்று ஒரு காரணத்தைக் கூறி மாரி 2 தங்களது அனுமதியுடன் தான் ரிலீஸ் செய்யப்படுகிறது போன்ற தோற்றத்தை விஷால் ஏற்படுத்தியுள்ளதாகக் கூறுகின்றனர் தயாரிப்பாளர்கள்.

முந்தைய பகுதிகள் :

விஷாலுக்கு நேரடி சவால் விட்ட தனுஷ்

விஷால் - தனுஷ்: பனிப்போர் அல்ல; நேரடி மோதல்!

வெள்ளி, 7 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon