மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 ஜன 2021

அதிமுக கூட்டணி: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி!

அதிமுக கூட்டணி: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி!

வருகிற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு இணக்கமான கட்சிகளோடு கூட்டணி வைத்து போட்டியிடுவது பற்றி பரிசீலிப்போம் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இன்று வெளியான ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டில் அவர் அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதன் சில பகுதிகள்...

2017 செப்டம்பர் மாதம் நீங்கள், எடப்பாடி பழனிசாமி அணியோடு இணைந்ததில் இருந்து கட்சி எவ்வாறு செல்கிறது?

மிகவும் சுமுகமாகவே செல்கிறது. நான் எவ்வித நிபந்தனையும் விதிக்காமல்தான் இணைப்புக்கே ஒப்புக்கொண்டேன். அம்மாவால் தோற்றுவிக்கப்பட்ட அரசை சீர்குலைப்பதற்கான அத்தனை நடவடிக்கைகளிலும் அப்போது தினகரன் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், அம்மாவின் அரசை நிலைநிறுத்துவதற்காகவே நான் அணிகள் இணைய சம்மதித்தேன்.

முதல்வர் பழனிசாமியோடு இணைந்து பணிபுரிவது எப்படி இருக்கிறது?

ஒரு பிரச்சினையும் இல்லை. அவர் அடிக்கடி என்னோடு ஆலோசனை நடத்துகிறார். நானும் அவரும் ஒத்துழைப்பாக இல்லை என்று எதிர்க்கட்சியினர்தான் தொடர்ந்து கட்சியினர் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் செயற்கையாக ஒரு கருத்தைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதை சில ஊடகங்களும் பெரிதுபடுத்துகின்றன.

டிடிவி தினகரன் தென்மாவட்டங்களில் அதிமுகவை அசைத்துப்பார்க்கிறார் என்கிறார்களே?

அதிமுகவில் இருக்கும் சில அதிருப்தியாளர்களும், எந்த பதவியிலும் இல்லாதவர்களும் தான் தினகரனோடுஇருக்கிறார்கள். எனவே அதிமுகவின் அடிப்படைக் கட்டமைப்பு எங்களோடு வலுவாகவே இருக்கிறது.

ஜெயலலிதாவுக்குப் பிறகான காலத்தில் அதிமுக பலவீனம் அடைந்திருக்கிறது என்ற ஒரு தோற்றம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தினகரன் பெற்ற வெற்றி போன்ற காரணிகள் இதற்கு ஆதரவாக முன் வைக்கப்படுகின்றன. இதையெல்லாம் இறுதியானவையாக ஏற்க முடியாது. ஏனெனில் சட்டமன்ற, நாடாளுமன்ற பொதுத் தேர்தல்களின்போது இவை தவறாகலாம். அதிமுக பலவீனமாக இருக்கிறது என்பதை நான் முற்றாக மறுக்கிறேன். ஆட்சியில் இருந்தாலும்,இல்லாவிட்டாலும் அதிமுக வலுவான அமைப்பாகவே தொடர்ந்து இருந்துவருகிறது.

அதிமுகவின் நலனைக் கருத்தில் கொண்டு டிடிவி தினகரன் அணியோடு உறவு மலர சாத்தியம் உள்ளதா?

எம்.ஜி.ஆர், அம்மா இருவருமே ஒற்றைக் குடும்ப ஆதிக்கத்துக்கு எதிரானவர்கள். எம்.ஜி.ஆர். திமுகவில் இருந்தபோதே அக்கட்சியில் கருணாநிதியின் குடும்ப ஆதிக்கத்தை எதிர்த்தார். அம்மாவும் அதே வழியையே பின்பற்றினார். சசிகலா ஒருவரைத் தவிர அவரது குடும்ப உறுப்பினர்களை அவர் பொருட்டாக கருதவில்லை. இந்த வழியில் இருந்து நாங்கள் மாறினால் எம்.ஜி.ஆர்., அம்மாவின் கொள்கைகளுக்கு துரோகம் இழைத்தவர்கள் ஆகிவிடமாட்டோமா? இனிமேல் கட்சியில் ஒரு குடும்பமோ, ஒரு நபரோ (சசிகலா) கட்சியில் ஆதிக்கம் செலுத்தும் என்ற கேள்விக்கே இடமில்லை.

ஜனநாயக வழியில் என்னைப் போலவோ, எடப்பாடி பழனிசாமியைப் போலவோ ஒரு சாதாரண உறுப்பினர் கட்சியில் உயரத்துக்கு வரவேண்டும், வர முடியும் என்பதுதான் இப்போதைக்கு எங்கள் நிலைப்பாடு.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மன்னிப்பு கேட்டால் ஏற்றுக் கொள்ளப்படுமா?

அதை கட்சி முடிவு செய்யும்.

அதிமுக என்பது பாஜகவின் பி டீம் ஆகிவிட்டது என்ற விமர்சனங்களுக்கு உங்கள் பதில் என்ன?

தவறான, கற்பிதமான பார்வை இது. அதிமுக கட்சியும், அதிமுக அரசும் தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்னைகளில் தமிழகத்தின் உரிமைகளுக்காக கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிறோம். மத்திய அரசை நடத்துபவர்களின் உத்தரவுகளுக்கு ஏற்ப நடந்திட வேண்டுமென்று அதிமுகவுக்கு எந்த நிர்பந்தமும் இல்லை. ஆனால் திமுக இதில் வேறுபட்டது.

அப்படியென்றால் குடியரசுத் தலைவர் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் போதும் பாஜகவை அதிமுக ஆதரித்தது ஏன்?

குடியரசுத் தலைவர் தேர்தலில் எங்களை முதலில் அணுகியது பாஜக என்பதாலும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டதாலும்தான் நாங்கள் ஆதரித்தோம். நம்பிக்கை இல்லா தீர்மானத்தைப் பொறுத்தவரை ஒரு நிலையான ஆட்சிக்கு இடைஞ்சல் கொடுப்பதை நாங்கள் விரும்பவில்லை. எந்த வகையிலும் முன்கூட்டியே தேர்தல்களை திணிக்கவும் அதிமுக விரும்பவில்லை.

வருகிற மக்களவை தேர்தலில் பாஜக உள்ளிட்ட கட்சிகளோடு அதிமுக கூட்டணி அமைக்க வாய்ப்பிருக்கிறதா?

எங்களோடு இணக்கமான ஒத்த, கருத்துள்ள கட்சிகள் கூட்டணிக்காக எங்களை அணுகினால் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூடி இதுகுறித்து விவாதித்து முடிவெடுப்போம்.

என்று பேட்டியளித்திருக்கிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

வெள்ளி, 7 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon