மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 26 பிப் 2021

ஷாட் ரெடி… நிஜம் பழகு - 9: வக்கிரங்களின் ஊற்றுக்கண் எது?

ஷாட் ரெடி… நிஜம் பழகு - 9: வக்கிரங்களின் ஊற்றுக்கண் எது?

மின்னம்பலம்

ஈரோடு கதிர்

எண்பதுகளின் மத்திம காலம் அது, எனக்குப் பதின் வயதின் நுழைவுக் காலம். உறவுக் குடும்பமொன்றில் அடிக்கடி சண்டை நடக்கும். அடிக்கடியென்றால், எனக்கு நினைவு தெரிந்த காலம்தொட்டு சண்டை இருந்தது. கணவர் பார்ப்பதற்கு புள்ளப்பூச்சி மாதிரி இருப்பார். அதிர்ந்து பேச மாட்டார். மனைவிக்கு வயது நாற்பதுகளில் இருந்திருக்கும். மகளுக்குத் திருமணம் நடந்து பேரக் குழந்தைகள் இருந்தன. மகன் பதின் வயதின் பாதியில் இருந்திருப்பான். ஒருநாள் மனைவி வீட்டை விட்டு வெளியேறி ஆற்றைத் தாண்டி வேறொரு கிராமத்திற்குக் குடி போய்விட்டார்.

அது ‘புருசன் பொண்டாட்டி சண்டை’ என்பதாகவே கேள்விப்பட்டதுண்டு. சில மாதங்கள் கழித்து மாமனார், கணவர், மகன் என்று ஆண்களின் படை ஊரிலிருந்து சிலரை அழைத்துக் கொண்டுவந்து, அந்தப் பெண் தங்கியிருந்த கிராமத்தில் நியாயம் கூட்டினர். நியாயம் கூட்டுதல் என்றால் பஞ்சாயத்து வைத்தல். இரவு நீண்ட நேரம் ஏதேதோ விசாரணைகள் நடந்தன. கணவரும், மாமனாரும் கெஞ்சிப் பார்த்தார்கள். அவர் மனம் இறங்குவதாகத் தெரியவில்லை. தூங்கிக்கொண்டிருந்த மகன் முகத்தில் தண்ணீர் அடித்து எழுப்பி உட்கார வைத்து, தூக்கத்தில் அழுதுகொண்டே சரிகின்றவனைக் காட்டியும் அவர் பரிதாபம் கொள்ளவில்லை.

சில வாரங்கள் கடந்து, என்ன உடன்படிக்கையென்று தெரியவில்லை கணவன் வீட்டிற்கே திரும்பினார். அப்படித் திரும்பியவர் மற்றொரு சந்தர்ப்பத்தில் அவர் வயதொத்த பெண்களிடம் ஒரு இரவில் அழுது கொண்டே “எங்கே போனாலும் வந்து அமுத்திக்கிறான். வூடு, காடு மேடுனு இல்ல. அவனுக்கு பயந்து பயந்தே ஓட வேண்டீதா இருக்கு. தொணைக்கு எப்பவும் ஆள் வச்சுத்தான் சமாளிக்கிறேன். ஆள் இல்லீனு தெரிஞ்சா வந்து அமுத்திக்கிறான்” எனக் கூறியதன் அர்த்தம், தீவிரம் பல ஆண்டுகள் கழித்துத்தான் எனக்குப் புரிந்தது. இப்போது யோசித்தால்தான் தெரிகிறது, ‘அவர் அந்தப் பிரச்சனையை என்னவென்று சொல்லி ஊர் பஞ்சாயத்தில் தனக்கு நியாயம் தேடியிருக்க முடியும்?’

பத்து வருடங்களுக்கு முன்பு நண்பன் ஒருவன் அழைத்திருந்தான். புது மாப்பிள்ளை, சில வாரங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்திருந்தது. கலகலப்பாகப் பேசுகிறவன், அன்றைக்குத் தயங்கித் தயங்கியே பேசினான். ”என்னடா பிரச்சினை” என்றேன். ”ரெண்டு வாரம் ஆவுது மாப்ள... ஒன்னும் செல்லுபடியாகலடா... என்ன பண்றதுனே தெரியல” என்றான். மனைவியோடு உறவு சாத்தியப்படவில்லை என்பதுதான் பிரச்சனை. தொடர்ந்து பேச்சுக் கொடுக்க, சிலர் அவனை முதலிரவிலேயே அவனுடைய ஆண்மையின் ஆற்றலை முழுக்க வெளிப்படுத்திவிட வேண்டுமெனத் தவறாக உசுப்பேற்றியிருக்கிறார்கள்.

அதற்கேற்ப ஒவ்வொருவரும் கதைகளை அவிழ்த்துவிட்டிருக்க, அதையெல்லாம் நிஜம் என்று நினைத்தவன், அன்றைய தினத்தில் சொதப்பிவிட, அதுவே அடுத்தடுத்த நாட்களில் அவனை முடக்கிவிட, ஒருகட்டத்தில் விரக்தியின் உச்சத்திற்குச் சென்றவன், ஒருநாள் போதையில், இன்னொரு நாள் ஏதோ மருந்தின் உதவியோடு என்று அழிச்சாட்டியம் செய்திருக்கிறான். மனைவி மிரண்டு ஒடுங்கியிருக்கிறார். இரவை அவர் வெறுக்கத் தொடங்கியிருக்கிறார். இனி தான் தாம்பத்யத்திற்கு சரி வர மாட்டோம் என்ற நிலையில்தான் என்னிடம் கொட்ட ஆரம்பித்தான்.

இரவில் வேறு முகம்

நல்ல படிப்பு, நல்ல பின்புலம், அதிகாரமிக்க குடும்பம். படித்த படிப்பிற்கு நல்லதொரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்யும் சாத்தியமுள்ள பெண். அவளின் பல்வேறு செயல்பாடுகளும், தேடல்களும் எனக்கு பெரும் ஆச்சரியத்தைத் தரும். வீட்டில் அடுத்தடுத்து இரண்டு பெண் பிள்ளைகள். மூத்தவள் என்ற பொறுப்பு நிறைய உண்டு. மிகப் பொருத்தமான இடத்தில் திருமணம், அழகான கணவன், பெரிய தொழில் சாம்ராஜ்யம் என அவளின் வாழ்வு பார்ப்பவர்களுக்கு அழகாகத்தான் தெரியும். அவளுடைய குதூகலத்தில், கொண்டாட்டத்தில் எனக்கு மட்டும் ஒரு செயற்கைத்தனம் தெரிந்தது.

அழகிய கூடு என்று நினைத்தது பிழையெனப் புரிந்தபோது உண்மையில் நம்ப முடியவில்லை. அனைவருக்கும் பிடிக்கும் பக்கத்து வீட்டுப் பையன் தன்மை வாய்ந்த திரைப்பட நாயகன் போலிருந்த அவளின் கணவனுக்கு பகலில் ஒரு முகமும், இரவில் ஒரு முகமும் இருந்ததை விவரித்தபோது ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

மாதவிடாய் காலம் எனினும், எந்த மனநிலையில் இருந்தாலும், அழைத்த பொழுதெல்லாம், எந்தச் சூழலாய் இருந்தாலும் உடல் தினவிற்கு அடிபணிந்தே தீர வேண்டும். அம்மா வீட்டுக்குப் போனாலும் இரவுகளில் வந்துவிட வேண்டும். உடல் தேவை நிமித்தம் இழைக்கப்பட்ட வன்முறைகளும், சிகிச்சைகளும் குறித்துக் கேள்விப்பட்டபோது எனக்கும் நடுங்கியது.

அவளின் இரவுகளும் அவர்களின் அந்தரங்கப் பொழுதுகளும் ரத்தத்தில் தோய்ந்தவை என்பதை அறிந்தபோது, முப்பதாண்டுகளுக்கு முன்பு “எங்கே போனாலும் வந்து அமுத்திக்கிறான். வூடு, காடு மேடுனு இல்ல. அவனுக்கு பயந்து பயந்தே ஓட வேண்டியதா இருக்கு. தொணைக்கு எப்பவும் ஆள் வச்சுத்தான் சமாளிக்கிறேன். ஆள் இல்லீனு தெரிஞ்சா வந்து அமுத்திக்கிறான்” என்பதுதான் சுளீரென நினைவில் அறைந்தது.

தோட்டத்தை அழிக்கும் பன்றிகள்

சுதாவிற்கு சந்திரனோடு திருமணமாகி, மாமியார், மைத்துனன் மற்றும் நட்புகளோடு மலைக் கிராமத்திற்கு ஜீப்பில் வரும் வழியில் ஜீப் பழுதாகி விடுகிறது. எலக்ட்ரிகல் வேலை செய்யும் புது மாப்பிள்ளை சந்திரன் ஜீப் பழுதை சரி செய்து, கறை படிந்த கைகளை புதுச் சட்டையில் துடைத்தபடி, மீண்டும் ஜீப்பில் ஏறி ஓட்டுனருக்கும் சுதாவிற்கும் இடையே அமர்ந்து இறுக்கமான முகபாவனையோடு இல்லற வாழ்க்கைப் பயணத்தையும் தொடங்குகிறான்.

எப்போதும் யானைகளும் காட்டுப் பன்றிகளும் மிரட்டும் அந்த மலைக்கிராமத்தில், மாமியார், மைத்துனன் வசிக்கும் ஒண்டுக் குடித்தன வீட்டில் இல்லற வாழ்க்கையைத் துவங்குகிறாள் சுதா. தம்பதிகளுக்கென்று தடுப்பாக இருக்கும் மண் சுவர் கொண்ட அறைக்குக் கதவுகூடக் கிடையாது. வெறும் திரை மட்டுமே. சந்திரன் உருவாக்கிய எப்போதும் அணையாத, அவ்வப்போது நிறம் மாறி ஒளிரும் வித்தியாசமான விளக்கு அவளை மிரட்டுகிறது. இருக்கும் ஒரே சன்னலில், ஒரு பக்கத்திற்கு பலகையே கிடையாது, மற்றொன்று மூட முடியாத நிலையில். முதல் நாளே தம்பி மற்றும் நண்பர்களோடு குடித்துவிட்டு தாமதமாகவே முதலிரவு அறைக்கு வருகிறான் சந்திரன். சுதாவை முரட்டுத் தனமாய் அணைக்க, திறந்திருக்கும் சன்னல், நீல நிறத்தில் ஒளிரும் விளக்கு ஆகியவற்றின் ஒவ்வாமையால் அவள் திணற, வெறுப்போடு கடுகடுத்தபடி விலகி, உறங்கிப் போகிறான். சுதாவிற்கு வெளிச்சத்தில் உறக்கம் வர மறுக்கிறது. சந்திரனுக்கு வெளிச்சம் இல்லாவிடில் பயம்.

அடுத்த நாள் இரவும் அதே இறுகிய முகத்துடன் வருகிறான். சுதாவை சக மனுஷியாகக்கூட மதிக்காதவன், அவளை மனைவியாகக் கருதுவான் என எப்படி எதிர்பார்க்க? அடுத்தடுத்த நாட்களிலும் அவர்களுக்கிடையே உறவு நிலை இறுக்கமாகிறது. அம்மாவோடு சண்டை போட்டு ஒரு இரவில் வீட்டை விட்டு வெளியேறி கடையில் உறங்குகிறான். மற்றொரு நாள் படுக்கையில் அவள் முகத்தை வன்மையாகத் தன் பக்கம் இழுக்க, அவள் விளக்கு எரிவதைச் சுட்டிக் காட்ட, வெறிகொண்டு தாக்குகிறான்.

அவளாக முயற்சித்து அட்டையும் சாக்கும் கொண்டு சன்னலுக்கு கதவு செய்கிறாள். தொடர்ந்து எரியும் விளக்கிற்கு ஸ்விட்ச் பொருத்த முற்படுவதைக் கண்டு அடிக்கிறான். நாட்கள் கடக்க, குறித்த வேலையொன்றிலும் அழுத்தம் கூட, போதையில் அவளை நிர்பந்திக்க, அவள் மறுக்க, மிருகத்தனமாக அடித்து அவளை வன்புணர்வு செய்கிறான். திரைக்கு வெளியே அவளின் ஓலத்தைக் கேட்டவாறு ஒன்றும் செய்யவியலாமல் படுத்துக் கிடக்கிறாள் மாமியார். அண்ணி உடை மாற்றுவதைத் திரை வழியே நிழலாய் ரசிக்கும் மைத்துனன், அந்த ஓலத்தினிடையே வெளியே வந்தமர்ந்து ஆசுவாசமாய் சிகரெட் பிடிக்கிறான்.

அடுத்த நாள் காலை. மருமகளின் நிலை புரிந்து ஒடம்பு வலிக்கு சுடு காப்பி நல்லதெனத் தருகிறார் மாமியார். நரகத்திற்குள் சிக்கிக்கொண்டதை முழுதும் உணர்ந்த சுதா, தப்பிக்க நினைத்து தன்னுடைய துணிகளை எடுத்துக்கொண்டு காட்டுப் பாதையில் திசை புரியாமல் ஓடி, சந்திரனிடமே சிக்கிக்கொள்கிறாள். தாக்க வருபவனிடமிருந்து தப்பிக்க நினைக்கும்பொழுது, வழி மறித்தவாறு காட்டுப் பன்றியொன்று மிரட்டுகிறது. மிக மோசமாக அடித்துத் தரதரவென வீட்டிற்கு இழுத்து வருகிறான்.

தாக்குதல், வன்புணர்வு என ருசி கண்ட சந்திரன் அடுத்ததொரு இரவில் நலிந்து கிடப்பவளைக் குரூரமாய் அணுகுகிறான். குறடை எடுத்து அவள் முகத்தில் தொடங்கி, உடல் முழுக்க உரசி, பாதத்தில் நிறுத்தி, அவள் புடவையை குறடினாலேயே விலக்கி, கட்டை விரலைக் குறடால் கவ்வி காலை அகட்டி... அவனுக்குத் தேவையானதை அவன் வழக்கம்போல் அடைகிறான். அதுவே அவனுக்கான தேவையாக, ருசியாக மாறிப்போகிறது.

அவனிடமிருந்து, அவன் படைத்திருக்கும் நகரத்திலிருந்து தப்பிக்க சுதாவிற்கு இரண்டு வழிகள் மட்டுமே இருக்கின்றன. ஒன்று தன்னை அழித்தல் மற்றொன்று தன்னை வதைப்பதை அழித்தல். தோட்டத்தைப் பன்றிகள் நாசம் செய்கிறது என்பதற்காக, பன்றிகளைத்தான் வேட்டையாடுகிறார்களே தவிர, ஒருபோதும் பன்றிகளின் கொடுமைகளுக்குப் பயந்து தோட்டத்தை அழிப்பதில்லை.

சுதா மூங்கில் கழிகளை கத்தரித்து முனையினைக் கூர்மையாக்கி, தோட்டத்தை நாசம் செய்யும் காட்டுப் பன்றிகளை வேட்டையாட குழிவெட்டி அதற்குள் குச்சிகளை நட்டு, மேலே காகிதம் போர்த்தி, அதன்மீது பன்றிகளுக்குப் பிடித்த கிழங்குகளை தூவிக் காத்திருக்கிறாள்.

பன்றியொன்று அதில் வீழ்ந்து மாண்டுபோகும் தினத்தில், சுதாவும் விடுதலையடைகிறாள். அவள் அறையில் தொடர்ந்து ஒளிர்ந்துகொண்டேயிருந்த விளக்கிற்கு ஒரு ஸ்விட்ச் பொருத்தி, வெளிச்சத்தை அணைத்து இருளை நிரப்பிக்கொள்கிறாள்.

அவ்வளவாக உரையாடப்படாத ‘இல்லற வன்புணர்வு’ கொடுமையை, மலையாளத் திரைப்படமான ‘ஓட்டமுறி வெளிச்சம்’ மிகுந்த வலியோடு வெளிச்சமிடுகிறது. அறிமுக இயக்குனர் ராகுல் ராஜி நாயர் இயக்கிய ‘ஓட்டமுறி வெளிச்சம்’ திரைப்படம் 2017ஆம் ஆண்டு கேரள மாநில அரசின் சிறந்த படத்திற்கான விருது பெற்றது குறிப்பிடத் தகுந்தது.

காமமும் வக்கிரமும்

காமம் என்பது உடலின் தேவையா, மனதின் தேவையா? காமத்தின் வடிகால் என்பது இசைவான கூடலா, வன்புணர்வா? காமத்தின்பால் நடக்கும் எல்லாக் கொடுமைகளையும் மறைத்தே பேசப் பழகியிருப்பதுதான் நம்முடைய பலவீனங்களில் வலுவானது. காமத்தை மறைத்துப் பேச, இழிவுபடுத்த எந்த நியாயமுமில்லை. காமம் என்பது உயிரின விருத்தியின் அடிநாதம். அதற்குள் ஒரு சுகத்தை இயற்கை புகுத்தி வைத்திருப்பது அந்த அடிநாதம் இனிதாக இசைப்பட வேண்டுமென்பதற்காகத்தானே.

காம உணர்வுகளைப் பகிர்ந்து கழிக்க, கொண்டாட இணக்கமான, இசைவான வழிகள் இருந்தாலும், அது இல்லற வன்புணர்வாக மாறிப்போவதன் அடிப்படை என்னவாக இருக்கும். திணிப்பாய், அடிபணியச் செய்வதாய் நிகழ்த்தப்படும் காமத்தில் ஒருபோதும் உயிர்ப்பிருப்பதில்லை. வன்புணர்வுகளில் கரைவது ஒருபோதும் காமம் அல்ல. உள்ளே சுரந்து தேங்கிக் கிடக்கும் வக்கிரத்தைக் காமத்தின் பெயரால் உடல் வழியே கரைக்கும் அக்கிரமம்.

தனியே செயல்படுவதற்கும், குழுவாய்ச் செயல்படுவதற்கும் இடையே எப்போதும் வேறுபாடுகளுண்டு. வன்புணர்வுகளின் தருணங்களிலெல்லாம் தனி ஒரு ஆன்மா ஆட்சி செய்வதில்லை. உள்ளிருந்து வக்கிர அரக்கர்கள் குழுவாய் வெளியேறி ஒன்றிணைந்து கொக்கரிப்பார்கள். எதையும் செய் எனும் அசாத்திய தைரியம் தருவார்கள். எதுவாகவும் நீ வதைசெய் எனத் தூண்டிவிடும். அந்த ஈனத் தைரியமே, துரத்தி அழுத்தும், எப்படியாவது செல்லுபடியாக வேண்டும் எனப் போராடும், இரவு பகல் பாராது மிரட்டி அழைக்கும், பெண்ணுறுப்பில் கம்பியைப் பாய்ச்சும், குத்திக் குடலை உருவி வீசும்.

வக்கிரங்களின் பின்னணியில் தன் பலவீனத்தை மறைக்கும், தான் என்கிற அகங்காரத்தைக் காட்டும் முனைப்பு இருக்கலாம். ஒருமுறை பழகி, அதையே தொடர்ந்து செயல்படுத்தி தன்னை பலம் மிகுந்தவராய்க் காட்டும் போலித்தனமும் உண்டு. இவர்களிடம் மிக ஆபத்தானதொரு நுண்ணிய மனச்சிதைவு மிகுந்திருக்கும். அந்தச் சிதைவு மிகும் தருணம் தவிர்த்து, ஏனைய தருணங்களிலெல்லாம் மிக அமைதியாகவும்கூட காட்சியளிக்கலாம். அப்படி அமைதியாயிருக்கும் தருணங்கள் அனைத்திற்கும் சேர்த்தே, அக்கிரமங்களின் கனம் கூடுகிறது.

என்றேனும் ஒருநாள் சாம்பலாகும் அல்லது மண்ணோடு மண்ணாகும் உடல், சக உடல் மீது இத்தனை வெறிகொண்டலைந்து துன்புறுத்துமா எனும் கேள்வி உள்ளே அடங்காது எதிரொலித்துக் கொண்டேயிருக்கிறது.

(கட்டுரையாளர் : ஈரோடு கதிர் - எழுத்தாளர், மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர், பேச்சாளர். உறவெனும் திரைக்கதை, பெயரிடப்படாத புத்தகம், கிளையிலிருந்து வேர்வரை ஆகிய நூல்களின் ஆசிரியர். அவரைத் தொடர்புகொள்ள: [email protected])

முந்தைய கட்டுரைகள் :

அந்தத் துவைக்காத சட்டை!

உறவுகளின் எல்லைப் போராட்டம்!

கசப்பேறும் கூழ்!

தனிமையெனும் தகிப்பு!

விடுதலையின் முதற்புள்ளி எது?

இரு முனைகளினிடையே நிகழும் பயணம்!

வாழ்க்கையெனும் கயிற்றில் நடை பயிலுதல்!

உயிரோடு இருப்பதா வாழ்க்கை!

வெள்ளி, 7 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon