மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 டிச 2018

நீட் தேர்வு: விண்ணப்பத்துக்கான கால அவகாசம் முடிவு!

நீட் தேர்வு: விண்ணப்பத்துக்கான கால அவகாசம் முடிவு!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்று (டிசம்பர் 7) கடைசி நாளாகும்.

தற்போது பன்னிரண்டாம் வகுப்பு படித்துவரும் மாணவர்கள் மற்றும் தனியாக தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர, 2019ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது என்டிஏ எனப்படும் தேசிய தேர்வுகள் முகமை. இதற்கு நவம்பர் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

கஜா புயலினால் ஏற்பட்ட பாதிப்பினால், டெல்டா மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் புத்தகங்களையும் சான்றிதழ்களையும் இழந்துள்ளனர். அவர்களால் நீட்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டதால், கடந்த 29ஆம் தேதியன்று நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்குமாறு தமிழக அரசின் சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தேசிய தேர்வு முகமைக்குக் கடிதம் எழுதினார்.

இதற்கிடையே, நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கான வயது வரம்பு குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 7ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டுமென்று உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். இதனால், தமிழகத்துக்கும் கால அவகாசம் கிடைத்தது. இந்த நிலையில், மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றோடு முடிவடைகிறது. ஆன்லைனில் கட்டணம் செலுத்த நாளை கடைசி நாளாகும். மேலும் விவரங்களுக்கு www.nta.ac.in என்ற இணையதளத்தைப் பார்த்து அறியலாம்.

வெள்ளி, 7 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon