மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 டிச 2018

ஈரோட்டில் ஜவுளிக் கண்காட்சி!

ஈரோட்டில் ஜவுளிக் கண்காட்சி!

இந்தியா மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்களுக்கு உற்பத்தி மற்றும் விற்பனை வாய்ப்புகளை எளிதாக்கும் விதமாக ஈரோட்டில் 4 நாள் ஜவுளிக் கண்காட்சி நடந்து வருகிறது.

வீவ்ஸ் என்ற தலைப்பில் இக்கண்காட்சி டிசம்பர் 5ஆம் தேதி தொடங்கியது. இந்தியத் தொழில் சங்கமும், ஈரோடு டெக்ஸ்வேலி நிர்வாகமும் இணைந்து இக்கண்காட்சியை நடத்துகின்றன. இதில் 250 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. வாங்குவோர், விற்பனையாளர்கள் மட்டுமின்றி 1000க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்களும் இக்கண்காட்சியைப் பார்வையிட வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 4 நாள் கண்காட்சியின் மூலம் ரூ.800 கோடி வருவாய் ஈட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபேப்ரிக் மற்றும் நெசவு இயந்திரங்களும் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

இந்த நிகழ்ச்சி குறித்து ஆடைகள் ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சிலின் துணைத் தலைவர் ஏ.சக்திவேல் தி இந்து ஆங்கில ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில், “நூல் மற்றும் துணி ஏற்றுமதியில் 60 விழுக்காட்டையும், பின்னலாடை ஏற்றுமதியில் 80 விழுக்காட்டையும் தமிழ்நாடு கொண்டுள்ளது. ஜவுளித் துறையில் 40 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் 60 விழுக்காட்டினர் பெண்களாவர்” என்றார்.

ஈரோடு டெக்ஸ்வேலியின் துணைத் தலைவரும், இந்தியத் தொழில் சங்கத்தின் ஈரோடு மண்டல முன்னாள் துணைத் தலைவருமான சி.தேவராஜன் கூறுகையில், “தற்போது துணி நெய்யும் துறையின் மதிப்பு ரூ.35,000 கோடியாக உள்ளது. தொழில்நுட்ப மேம்பாடுகளையும், மதிப்பு கூட்டும் பணிகளையும் கவனமாக மேற்கொண்டால் 2025ஆம் ஆண்டுக்குள் இதன் மதிப்பு ரூ.1 லட்சம் கோடியாக அதிகரிக்கும்” என்றார்.

இந்தக் கண்காட்சியின் ஒரு அங்கமாக நேற்று (டிசம்பர் 6) ஆடை அணிவகுப்பு நடந்தது. இதில் 25 மாடல்கள் 85 விதமான ஆடைகள் அணிந்து அணிவகுப்பில் பங்கேற்றனர்.

வெள்ளி, 7 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon