மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 டிச 2018

ராஜஸ்தான், தெலங்கானா தேர்தல் நிலவரம்!

ராஜஸ்தான், தெலங்கானா தேர்தல் நிலவரம்!

ராஜஸ்தான் மற்றும் தெலங்கானாவில் இன்று (டிசம்பர் 7) ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இவ்விரு மாநிலங்களிலும் காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மத்தியப் பிரதேசம் . மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் இன்று ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. மத்தியப் பிரதேச தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வந்தநிலையில் இன்று நடைபெறும் இரு மாநில தேர்தல்களிலும், ஜெய்ப்பூர் உட்பட பல்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியுள்ளது. எனினும் காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

ராஜஸ்தானில் 11மணி நிலவரப்படி, 22.01சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. தெலங்கானாவில் 23சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, ஜாலாவார் பகுதியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

பேட் மிண்டன் வீராங்கனை பிவி சிந்து, கோகாபெட் பகுதியிலும், ஜூப்பிலீ ஹில்ஸில் உள்ள வாக்குச்சாவடியில் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா மற்றும் அவரது மனைவி அமலாவும் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடிகளில் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கருத்துக் கணிப்புகள் வெளியிடத் தடை

ராஜஸ்தான் மற்றும் தெலங்கானாவில் தேர்தல் நடைபெறுவதால் இன்று மாலை 5.30 மணி வரை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. மின்னணு அல்லது அச்சு ஊடகங்கள் வாயிலாக எந்தவிதமான கருத்துக்கணிப்பும் வெளியிடக்கூடாது எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வெள்ளி, 7 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon