மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 டிச 2018

ஸ்மார்ட்போனிலும் கால்பதித்த யான்டெக்ஸ்!

ஸ்மார்ட்போனிலும் கால்பதித்த யான்டெக்ஸ்!

ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல சர்ச் இஞ்சின் நிறுவனமான யான்டெக்ஸ், தற்போது ஸ்மார்ட்போன் சந்தைக்குள் காலடி எடுத்து வைத்துள்ளது.

ரஷ்யாவில் சர்ச் இஞ்சின் சேவையில் மட்டுமல்லாமல் டாக்ஸி மற்றும் உணவு ஆர்டர் செய்யும் சேவைகளிலும் கூகுளுக்குப் போட்டியாக விளங்கி வரும் யான்டெக்ஸ் நிறுவனம் தனது முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை ரஷ்யாவில் நேற்று (டிசம்பர் 6) அறிமுகம் செய்துள்ளது. சீனாவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போன் இந்திய மதிப்பில் சுமார் 19,000 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளது. பேமென்ட், மியூசிக், மேப்ஸ், டாக்ஸி உள்ளிட்ட யான்டெக்ஸின் சொந்த செயலிகளையும் இந்த போன் உள்ளடக்கியுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் குறித்து யான்டெக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரஷ்ய மக்களின் அன்றாட தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் நோக்கில் இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனுக்குள் இருக்கும் அலைஸ் சேவையில் பல்வேறு வசதிகள் புகுத்தப்பட்டுள்ளன. எனவே ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனியாக செயலிகளை திறக்க அவசியமில்லை. அலைஸைத் திறந்து அதனிடம் உரையாடினாலே போதுமானது" என்று கூறியுள்ளது.

இந்நிறுவனம் ரஷ்யாவில் அமேசான் அலெக்ஸாவுக்கு போட்டியாக அலைஸ் என்ற ஸ்மார்ட் ஸ்பீக்கரை வெளியிட்டுள்ளது.

2013ஆம் ஆண்டு `யோட்டாபோன்' என்ற பெயரில் இரண்டு பக்க திரையுடன் ஸ்மார்ட் போன் ஒன்றை இந்நிறுவனம் வடிவமைத்திருந்தது. ஆனால் சோதனை முயற்சியில் தோல்வியடைந்ததால் அந்த போன் விற்பனைச் சந்தையை அடையாமல் போனது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 7 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon