மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 டிச 2018

வெப்சீரிஸில் களமிறங்கிய நட்சத்திரங்கள்!

வெப்சீரிஸில் களமிறங்கிய  நட்சத்திரங்கள்!

வெப் சீரிஸ்களுக்கான வரவேற்பு இந்தியில் உள்ள அளவுக்குத் தமிழில் உருவாகவில்லை என்றாலும் குறிப்பிட்ட ரசிகர்கள் கூட்டம் இதற்கு உண்டு. பரிசோதனை முயற்சியாக, தங்களது திறமையை நிரூபிப்பதற்காக இளைஞர்கள் வெப் சீரிஸ் பக்கம் வருகின்றனர். முன்னணி நடிகர்கள், நடிகைகள் தயாரிப்பாளர்கள் பெருமளவில் தமிழில் வெப் சீரிஸ் உருவாக்க ஆர்வம் காட்டவில்லை என்றாலும் பாலாஜி மோகன் உள்ளிட்ட திரைத்துறையைச் சார்ந்தவர்கள் அதைத் தொடர்ந்து வருகின்றனர்.

தற்போது பாபி சிம்ஹா, பார்வதி நாயர், காயத்ரி எனத் திரையுலகில் பிஸியாக வலம் வரும் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து புதிய வெப்சீரிஸில் நடித்துள்ளனர். ‘வெள்ள ராஜா’ என்ப் பெயரிடப்பட்டுள்ள இந்த வெப்சீரிஸ் அமேசான் தளத்தில் இன்று (டிசம்பர் 7) வெளியாகியுள்ளது. அருவி, தீரன் அதிகாரம் ஒன்று, கூட்டத்தில் ஒருவன், ஜோக்கர் உள்ளிட்ட படங்களைத் தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இதைத் தயாரித்துள்ளது. இந்நிறுவனம் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் என்ஜிகே திரைப்படம் தற்போது தயாராகி வருகிறது. தமிழில் உருவாகியுள்ள இந்த சீரிஸ் தெலுங்கு, இந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பப்படவுள்ளது.

போதைப் பொருள் கடத்தும் கும்பலின் தலைவராக பாபி சிம்ஹா நடித்துள்ளார். பார்வதி நாயர் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். காயத்ரியும், காளி வெங்கட்டும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சவாரி திரைப்படத்தை இயக்கிய குகன் சென்னியப்பன் இதை இயக்கியுள்ளார். மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் இதன் கதை உருவாக்கத்தில் பங்கெடுத்துள்ளார்.

கதையில் முக்கியமாக ஒரு லாட்ஜ் காட்டப்படுகிறது. பாவா லாட்ஜ் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த லாட்ஜ், போதைப் பொருள் கடத்தல் ஆகியவை தியாகராஜன் குமாரராஜா இயக்கிய ஆரண்ய காண்டம் படத்தை நினைவுபடுத்துகிறது.

ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளதால் துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட வன்முறைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இத்தகைய காட்சிகள் திரைப்படங்களில் இடம்பெற்றிருந்தால் தணிக்கை துறை ஏ சான்றிதழ் வழங்கியிருக்கும் சில காட்சிகள் நீக்கப்பட்டிருக்கும். இணையதளத்தில் வெளியாகும் படங்கள், வெப்சீரிஸ்களுக்கு தணிக்கை துறை அனுமதி பெறவேண்டியதில்லை என்பதால் படக்குழு சுதந்திரமாகச் செயல்பட்டுள்ளது.

வெள்ளி, 7 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon