மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 டிச 2018

ஜெட் ஏர்வேஸ்: தவணையில் சம்பளம்!

ஜெட் ஏர்வேஸ்: தவணையில் சம்பளம்!

விமான ஓட்டிகள் மற்றும் மூத்த மேலாளர்களுக்கான ஊதியத்தை மார்ச் மாதத்துக்குள் பல்வேறு தவணைகளில் வழங்கிவிடுவதாக ஜெட் ஏர்வேஸ் உறுதியளித்துள்ளது.

தனியார் துறை விமானப் போக்குவரத்துச் சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ், கடுமையான வருவாய் இழப்பைச் சந்தித்து வருவதோடு, பெருத்த கடன் சுமையில் சிக்கியுள்ளது. கடந்த இரண்டு, மூன்று மாதங்களாகவே உரிய நேரத்தில் ஊழியர்களுக்கு ஊதியம் கூட வழங்க இயலாமல் இந்நிறுவனம் தடுமாறி வருகிறது. தனது ஊழியர் சக்தி மற்றும் விமான இயக்கத்தையும் ஜெட் ஏர்வேஸ் குறைத்துள்ளது. நிதி நெருக்கடியைக் குறைக்கும் விதமாக மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட 20 பேரைப் பணிநீக்கம் செய்து உத்தரவிட்ட ஜெட் ஏர்வேஸ், அக்டோபர் மாத சம்பளத்தையும் இன்னும் வழங்காமல் உள்ளது. நவம்பர் 30ஆம் தேதிக்குள் சம்பள பாக்கியை வழங்கவில்லையென்றால் கூடுதல் பணி எதையும் தாங்கள் மேற்கொள்ளப்போவதில்லை என்று விமான ஓட்டிகள் சங்கம் எச்சரித்திருந்தது.

இந்நிலையில் சம்பள விவகாரம் குறித்து டிசம்பர் 6ஆம் தேதி ஜெட் ஏர்வேஸ் மேலிடத்துடன் விமான ஓட்டிகள் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. அதன் முடிவில் இந்த மாதத்துக்குள் அக்டோபர் மாதத்துக்கான 75 சதவிகித சம்பளம் வழங்கப்படும் எனவும், அதில் 25 சதவிகிதம் அளவு டிசம்பர் 6ஆம் தேதியே அவரவர் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இந்த விவரத்தை விமான ஓட்டிகள் சங்கம் தனது உறுப்பினர்களிடையே தெரிவித்துள்ளது. அக்டோபர் மாதத்துக்கான எஞ்சிய 25 சதவிகித சம்பளமும், நவம்பர் மாதத்துக்கான 75 சதவிகித சம்பளமும் 2019ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்திலும், டிசம்பர் மாதத்துக்கான 100 சதவிகித சம்பளம் மற்றும் ஜனவரி மாதத்துக்கான 25 சதவிகித சம்பளம் 2019 பிப்ரவரி மாதத்திலும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 7 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon