மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 டிச 2018

எழுவர் விடுதலை: எழுவர் உண்ணாவிரதம்!

எழுவர் விடுதலை: எழுவர் உண்ணாவிரதம்!

“எழுவரை விடுதலை செய்யும் வரை தவாகவின் உண்ணாவிரதப் போராட்டம் தொடரும்” என்று அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரின் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் இயற்றி அதனை ஆளுநருக்கு அனுப்பி வைத்த நிலையில், இதுவரை ஆளுநர் எவ்வித முடிவும் எடுக்கவில்லை. எழுவர் விடுதலையை வலியுறுத்தி, அரசியல் கட்சிகள் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி டிசம்பர் 7ஆம் தேதி சென்னையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறிவித்திருந்தது.

தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இன்று சென்னை சேப்பாக்கத்திலுள்ள விருந்தினர் மாளிகை அருகே தவாகவினர் ஏழு பேர் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கினர். பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் போராட்டத்தைத் தொடங்கிவைத்தார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், “அமைச்சரவையின் முடிவைக் குப்பையில் தூக்கிப் போட்டு, ஆளுநர் ஆணவத்தோடு நடந்துகொள்வது ஜனநாயகத்திற்கு விரோதமானது. ஆளுநரே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கவில்லையெனில், கடைகோடி இந்திய குடிமகன் எப்படி சட்டத்தை மதித்து அதற்கு தன்னை உட்படுத்திக்கொள்வான் என்கிற கேள்வியை எழுப்பி, பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலையை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தவுள்ளோம்” என்று தெரிவித்தார்.

“எங்களது நோக்கம் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்துவதல்ல. எங்கள் மீது பொய்வழக்கு போட முதல்வர் உத்தரவிடுகிறார். அவர் மனசாட்சியுடன் நடந்துகொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்ட வேல்முருகன், எழுவர் விடுதலைக்காக தீர்மானம் இயற்றியது நாடகமா என்றும், அதிமுகவினர் மூவரை 161வது பிரிவைப் பயன்படுத்தி விடுதலை செய்யச் சொல்லும் அதிகாரமுள்ள முதல்வர், ஆளுநரை நேரில் சந்தித்து எழுவர் விடுதலைக்கான முயற்சியை ஏன் எடுக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.

மேலும், “எழுவர் விடுதலையை மக்கள் பிரச்சாரமாக எடுத்துச் செல்வதற்குத்தான் எங்கள் கட்சியினர் எழுவரும் இந்த உண்ணாவிரதத்தில் அமர்ந்திருக்கிறார்கள். தொடர் உண்ணா விரதப் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. எங்கள் கட்சியின் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அங்கு அனுமதி பெற்று பொதுமக்களுக்கோ, சட்டம்-ஒழுங்குக்கோ பிரச்சினை இல்லாமல் எழுவரை விடுதலை செய்யும் வரையில் எங்களது உண்ணாவிரதப் போராட்டம் தொடரும்” என்றும் அறிவித்தார்.

வெள்ளி, 7 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon