மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 டிச 2018

சாலை பள்ளங்களால் உயிரிழப்பு: உச்ச நீதிமன்றம் வருத்தம்!

சாலை பள்ளங்களால் உயிரிழப்பு: உச்ச நீதிமன்றம் வருத்தம்!

சாலையிலுள்ள பள்ளங்களால் ஏற்படும் உயிரிழப்புகளை ஏற்றுக்கொள்ளவே முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சாலை விபத்து தொடர்பான ஒரு வழக்கு, நேற்று (டிசம்பர் 6) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சாலை பாதுகாப்பு தொடர்பான நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான ஆய்வுக் குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் குறிப்பிடப்பட்ட தகவல்களை அறிந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் சாலையிலுள்ள பள்ளங்களால் 14,926 நபர்கள் உயிரிழந்ததற்கு வருத்தம் தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொள்ளவே முடியாது எனவும் கூறினர். எல்லையில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டு உயிரிழக்கும் நபர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும், சாலையிலுள்ள பள்ளங்களால் உயிரிழக்கும் நபர்களின் எண்ணிக்கை உயர்வாக இருப்பதாக நீதிபதி மதன் பி.லோகுர் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.

2013ஆம் ஆண்டுக்கும் 2017ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் சாலை பள்ளங்களால் ஏற்பட்ட உயிரிழப்புகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலைகளை முறையாக பராமரிக்காததையே காட்டுகிறது என்று நீதிபதிகள் தீபக் குப்தா, ஹேமந்த் குப்தா ஆகியோர் தெரிவித்துள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அரசிடமிருந்து உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. சாலைகளைப் பராமரித்து வரும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மாநில நெடுஞ்சாலைத் துறைகள் போன்றவையே உயிரிழப்புகளுக்குக் கரணம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 7 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon