மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 டிச 2018

மேகதாட்டு: பிரதமரிடம் சென்ற தமிழகத் தீர்மானம்!

மேகதாட்டு: பிரதமரிடம் சென்ற தமிழகத் தீர்மானம்!

மேகதாட்டு அணை விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைப் பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “தீர்மானத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

மேகதாட்டு அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்க தமிழகச் சிறப்புச் சட்டமன்றக் கூட்டம் நேற்று (டிசம்பர் 6) நடைபெற்றது. இதுதொடர்பாக முதல்வர் கொண்டு வந்த தனித் தீர்மானம், அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடனும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இணைத்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், “மேகதாட்டு அணை தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்குக் கர்நாடக அரசுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அனுமதியைத் திரும்பப் பெற உத்தரவிட வேண்டும் என்று கடந்த நவம்பர் 27ஆம் தேதி உங்களுக்குக் கடிதம் எழுதியிருந்தேன். இந்த நிலையில், தமிழகச் சட்டமன்றத்தில் இது தொடர்பாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தொடர்ந்து, “தீர்மானத்தில் கர்நாடக அரசு மேகதாட்டுவில் புதிய அணை கட்டுவதற்கான ஆரம்ப பணிகளைத் தொடங்க உள்ளதற்கும், விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி வழங்கியதற்கும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளோம். மேலும், மத்திய நீர்வள ஆணையம் வழங்கிய அனுமதியைத் திரும்பப்பெற அக்குழுமத்துக்கு மத்திய நீர்வள அமைச்சகம் உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்” என்று சுட்டிக்காட்டியுள்ள முதல்வர்,

கர்நாடக அரசோ அல்லது அதன் கீழ் இயங்கும் நிறுவனங்களோ, கர்நாடகாவில் உள்ள காவிரி படுகையில், மேகதாட்டு அல்லது வேறு எந்தவோர் இடத்திலும் தமிழ்நாட்டின் ஒப்புதலின்றி எவ்வித கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று கர்நாடகா அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “தமிழக அரசு நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை ஆங்கிலத்திலும் இணைத்துள்ளேன். தீர்மானத்தின் மீது நீங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் பிரதமருக்கு வலியுறுத்தியுள்ளார்.

முடிவைக் கைவிடப்போவதில்லை

இதற்கிடையே பெங்களூருவில் நடைபெற்ற கர்நாடக முன்னாள் முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அம்மாநில நீர்வளத் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார், “மேகதாட்டு அணை கட்டும் முடிவை ஒருபோதும் கைவிடப்போவதில்லை. நாளை முதல் அணை கட்டுவது குறித்து ஆய்வுப் பணிகள் தொடங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 7 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon