மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 18 செப் 2020

சர்கார் சர்ச்சை வீடியோ: வாலிபர்கள் கைது!

சர்கார் சர்ச்சை வீடியோ: வாலிபர்கள் கைது!

சர்கார் படம் தொடர்பாகச் சர்ச்சை எழுந்தபோது, வாட்ஸ்அப் மூலமாகத் தமிழக அமைச்சர்களுக்கு மிரட்டல் விடுத்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தீபாவளிப் பண்டிகையையொட்டி, கடந்த நவம்பர் 6ஆம் தேதியன்று சர்கார் திரைப்படம் தியேட்டர்களில் வெளியானது. இதில் சர்ச்சைக்குரிய வசனங்கள், காட்சிகள் இடம்பெற்றதாகக் கூறி, அதிமுக தொண்டர்கள் இப்படத்துக்கு எதிராகப் போராட்டம் மேற்கொண்டனர். இதையடுத்து, மாநிலம் முழுவதும் நடிகர் விஜய் பேனர்கள், கட் அவுட்கள் கிழித்து எறியப்பட்டன. அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் விஜய்யைக் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

இந்நிலையில், விஜய் ரசிகர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு தமிழக அரசை இரண்டு இளைஞர்கள் விமர்சிக்கும் வீடியோவொன்று வாட்ஸ்அப்பில் வெளியானது. கையில் அரிவாளோடு அமைச்சர்களுக்கு மிரட்டல் விடுத்ததுடன், வசை வார்த்தைகளையும் அந்த இளைஞர்கள் பேசியிருந்தனர். கடந்த நவம்பர் 12ஆம் தேதியன்று, இந்த வீடியோவில் இடம்பெற்றிருந்த நபர்களைக் கைது செய்யுமாறு, பிரகாஷ் என்பவர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். இது பற்றித் தகவல் தெரிவிக்குமாறு சென்னை மத்தியக் குற்றப் பிரிவு அறிவிப்பு வெளியிட்டது.

நேற்று (டிசம்பர் 6) இந்த விவகாரம் தொடர்பாக சஞ்சய், அனிஷேக் என்ற இரண்டு இளைஞர்களை மத்தியக் குற்றப் பிரிவு காவல் துறை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில், அந்த வீடியோவை எடுத்தவர் வடபழனியைச் சேர்ந்த அனிஷேக் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. சர்ச்சை வீடியோவில் தோன்றியவர்கள் சஞ்சய், லிங்கதுரை என்பதும், இவர்கள் சென்னை எண்ணூரைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. லிங்கதுரை குறித்து இவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வெள்ளி, 7 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon