மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 டிச 2018

சிபிஐ இயக்குநரை உச்ச நீதிமன்றம் நியமிக்கலாமா?

சிபிஐ இயக்குநரை உச்ச நீதிமன்றம் நியமிக்கலாமா?

சிபிஐக்குத் தேவைப்படும் சூழலில் ஒரு தற்காலிக இயக்குநரை நியமிக்கலாமா என்று அந்த வழக்கில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் ஃபாலி நரிமனிடம் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நேற்று (டிசம்பர் 6) கேள்வி எழுப்பினார்.

சிபிஐயின் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா லஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டுக் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார். இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐயின் இயக்குநர் அலோக் வர்மாவும் ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார். அவரது ஆதரவாளர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில்,சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா தான் பதவியிலிருந்து கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் வர்மாவின் சார்பாக மூத்த வழக்கறிஞர் ஃபாலி நரிமன் ஆஜராகி வாதாடி வருகிறார்.

இந்த வழக்கில் நேற்று நடந்த விசாரணையில், சிபிஐயின் இயக்குநர்களிடையே நெடு நாட்களாக மோதல்கள் நடந்து வந்தன. ஆனால், அதையெல்லாம் சகித்துவந்த அரசு திடீரென்று அக்டோபர் மாதம் 23ஆம் தேதியன்று ஒரே இரவில் ஏன் அலோக் வர்மாவின் அதிகாரங்களைப் பறித்து கட்டாய விடுப்பில் அனுப்பியது என்று மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் சிபிஐ நிறுவனத்தைக் காப்பாற்ற வேறு வழியில்லை. அசாதாரண சூழ்நிலையில் அசாதாரண நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. எனவே, இருவரையுமே பதவியிலிருந்து நீக்கவில்லை, அதற்குப் பதிலாக கட்டாய விடுப்பில் அனுப்பியுள்ளோம் என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து நடந்த வாதங்களின்போது சிபிஐக்குத் தலைமை தேவைப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் அவசியமானால் ஒரு தற்காலிக இயக்குநரை உச்ச நீதிமன்றம் நியமிக்கலாமா என்று ஃபாலி நரிமனிடம் கேள்வி கேட்டார். அதற்குப் பதிலளித்த ஃபாலி நரிமன் அரசியல் சாசனத்தின்படி இயக்குநரை நியமிக்கும் இறுதி அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்குத்தான் உள்ளது என்பதால் தற்காலிக இயக்குநரை நியமிக்கலாம் என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து நீண்ட நேர விவாதங்களுக்குப் பின்னர் அலோக் வர்மாவும் காமன் காஸ் (அலோக் வர்மாவுக்கு ஆதரவாக வழக்கு தொடர்ந்த அமைப்பு) என்ற அரசு சாரா அமைப்பும் தொடர்ந்த தனித்தனி மனுக்களின் மீதான விசாரணைகளின் முடிவுகளை மறுதேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

வெள்ளி, 7 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon