மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 டிச 2018

இன்று தெலங்கானா, ராஜஸ்தான் தேர்தல்!

இன்று தெலங்கானா, ராஜஸ்தான் தேர்தல்!

தெலங்கானா, ராஜஸ்தான் மாநிலங்களின் சட்டப்பேரவைக்கு இன்று (டிசம்பர் 7) வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாகத் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்தனர். பரபரப்பான அரசியல் சூழலில் நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் அங்கு பிரச்சாரம் ஓய்ந்தது. தெலங்கானாவில் ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசத் தலைவருமான சந்திரபாபு நாயுடுவும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைவர் சந்திரசேகர் ராவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ராஜஸ்தானில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் உட்பட முக்கிய தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

தெலங்கானா தேர்தல் களம்

மொத்தம் 119 உறுப்பினர்களைக் கொண்ட தெலங்கானா சட்டப் பேரவைக்கு இன்று காலை முதல் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. மாவோயிஸ்ட் ஆதிக்கம் கொண்ட 13 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் மற்ற 106 தொகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் தேர்தல் நடைபெறும் என மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரி ரஜத்குமார் அறிவித்துள்ளார்.

தெலங்கானாவில் மொத்தம் 2.80 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இங்கு 1,821 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 32,815 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு, 55,329 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. 30,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். கூடுதலாக ராணுவத்தினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.

ராஜஸ்தான் கள நிலவரம்

200 உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப் பேரவைக்கும் இன்று தேர்தல் நடைபெறவுள்ளது. 187 பெண் வேட்பாளர்கள் உட்பட 2,274 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காலை 8 மணி முதல் 5 மணி வரை தேர்தல் நடைபெறவுள்ளது. 200 தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெறும். ஆல்வார் மாவட்டத்தில் ராம்கர் தொகுதியில் பகுஜன் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் மறைவால் அங்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் மொத்தம் 4,77,89,815 வாக்காளர்கள் உள்ளனர். 51,965 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வரும் 11ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கவிருக்கிறது. இன்றுடன் ஐந்து மாநிலத் தேர்தல்களும் நிறைவடைகின்றன.

வெள்ளி, 7 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon