மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 டிச 2018

விஜய் 63: அமெரிக்காவை மையமிட்ட படக்குழு!

விஜய் 63: அமெரிக்காவை மையமிட்ட படக்குழு!

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கவுள்ள நிலையில் படக்குழு அமெரிக்கா சென்றுள்ளது.

தெறி, மெர்சல் என விஜய்யைக் கதாநாயகனாகக்கொண்டு அட்லீ இயக்கிய இரு படங்களும் வெற்றி பெற்ற நிலையில் இந்தக் கூட்டணி உருவாக்கும் மூன்றாவது படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். ஏற்கெனவே இந்தப் படத்தின் அரங்கு அமைக்கும் பணிகள் சென்னையில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில் படப்பிடிப்பு தளங்களைத் தேர்வு செய்வதற்காக இயக்குநர் அட்லீ, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு ஆகியோர் அமெரிக்கா சென்றுள்ளனர். லாஸ்ஏஞ்சல்ஸில் அவர்கள் எடுத்த புகைப்படத்தை அர்ச்சனா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

கடந்த மாதம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போதும் பெரும்பாலான திரையரங்குகளில் அந்தப் படம் திரையிடப்பட்டு வருகிறது. அந்தப் படத்தில் விஜய் கதாபாத்திரம் அமெரிக்காவில் இருந்து தமிழகம் வருவதாகக் காட்டப்பட்டிருந்தது. அமெரிக்காவில் இடங்களைப் படக்குழு தேர்வு செய்து வருவதால் இந்தப் படத்தில் பல காட்சிகள் அமெரிக்காவை மையமாகக் கொண்டு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகக் கூறப்பட்டுள்ள நிலையில் அதே மாதம் நயன்தாரா நடிப்பில் இரு படங்கள் திரைக்கு வர உள்ளன. அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ள விஸ்வாசம், பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள கொலையுதிர்காலம் ஆகிய இரு படங்களும் அவரது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘விஜய் 63’ திரைப்படத்தில் யோகி பாபு, விவேக் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, முத்துராஜ் கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார். ரூபன் படத்தொகுப்புப் பணிகளைக் கவனிக்கிறார்.

வெள்ளி, 7 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon