மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 டிச 2018

சென்னை: விடுமுறைக்குக் கூடுதல் விமானங்கள்!

சென்னை: விடுமுறைக்குக் கூடுதல் விமானங்கள்!

கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட விடுமுறைக் காலங்களைக் கழிக்க விரும்பும் சென்னைவாசிகளுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தியாகச் சென்னை விமான நிலையத்திலிருந்து கூடுதல் விமானங்கள் இயக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விடுமுறைக் காலங்களில் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கும், இதர சுற்றுலாத் தலங்களுக்கும் செல்ல விமானப் பயணங்களை மேற்கொள்வோர் உண்டு. எனவே, அவர்களின் பயணங்களை எளிமையாக்க கட்டணக் குறைப்பு, அதிக விமானங்களை இயக்குவது போன்ற நடவடிக்கைகளை விமான நிறுவனங்கள் மேற்கொள்வது வழக்கம். அதன்படி, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகளை முன்னிட்டு கூடுதல் விமானங்களை இயக்க நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. சென்னையிலிருந்து கண்ணூர், நாக்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கும் புதிய விமானங்கள் இயக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. அகமதாபாத், புனே, கோவா ஆகிய நகரங்களுக்கு அதிகம் பேர் செல்வார்கள் என்பதால் அப்பகுதிகளுக்குக் கூடுதல் விமானங்கள் இயக்கப்படவுள்ளன.

குளிர்கால சீசனில் ஆறு முன்னணி நிறுவனங்கள் இணைந்து சென்னையிலிருந்து மொத்தம் 613 விமானங்களை இயக்கவுள்ளன. இதில் இண்டிகோ 332 விமானங்களையும், ஸ்பைஸ்ஜெட் 109 விமானங்களையும், ஜெட் ஏர்வேஸ் 92 விமானங்களையும், ஏர் இந்தியா 40 விமானங்களையும், கோ ஏர் 22 விமானங்களையும், விஸ்தாரா 18 விமானங்களையும் இயக்கவுள்ளன. இந்த விவரங்களை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. சென்னையிலிருந்து செல்லும் விமானங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டாலும் அது இதர மெட்ரோ நகரங்களிலிருந்து இயக்கப்படும் விமானங்களை விடக் குறைவுதான்.

பெங்களூருவுக்கு 539 விமானங்களை இயக்க இண்டிகோ ஒப்புதல் பெற்றுள்ளது. அதேபோல, ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் 144 விமானங்களை இயக்க ஒப்புதல் பெற்றுள்ளது. ஆனால், 92 விமானங்கள் மட்டுமே சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு இயக்கப்படவுள்ளன.

வெள்ளி, 7 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon