மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 டிச 2018

முதல்வர் சேலம் விசிட்: முழு வீச்சில் அதிகாரிகள்!

முதல்வர்  சேலம் விசிட்: முழு வீச்சில் அதிகாரிகள்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த வாரம் மீண்டும் சேலத்துக்கு செல்வது உறுதியாகியிருக்கிறது. கடந்த பிப்ரவரி 2017 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற முதல்வர் தனது சொந்த மாவட்டத்துக்கான சேலத்துக்குதான் அதிமுக முறை சென்றிருக்கிறார்.

அந்த வகையில் சேலத்துக்கு முதல்வரின் வருகையை ஒட்டி டிசம்பர் 5 ஆம் தேதி சேலம் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ரோகினி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சேலம் மாவட்ட எஸ்.பி. ஜோர்ஜி, சேலம் மாநகராட்சி கமிஷனர் சதீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அருள் ஜோதி ஆகியோர் கலந்துகொண்டனர் .

சேலம் மாவட்டத்துக்கு முதல்வரின் வருகையை ஒட்டிய முன்னேற்பாடு பணிகளைப் பற்றி விவாதிப்பதற்காக இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது.

இதுபற்றி அரசு ஊழியர்கள் வட்டாரத்தில் கேட்டபோது கொதிப்போடு பேசினார்கள்.

“முதல்வர் அடிக்கடி சேலம் வந்துகொண்டிருக்கிறார். அதற்காக முன்பெல்லாம் ஆய்வுக் கூட்டங்கள் நடக்கும். ஆனால் இந்த அளவுக்கு விரிவாக நடந்ததில்லை. கஜா புயல் அடித்துக் கொண்டிருந்தபோதுதான் முதல்வர் இங்கே வந்திருந்தார். அடுத்த இரு வாரங்களில் மீண்டும் வருகிறார். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் அரசின் திட்டங்கள் மக்களுக்கு போய் சேர்கிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

மேலும் சேலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள நலத்திட்டங்கள், அதன் புள்ளி விவரங்கள் பற்றி முதல்வர் அறிக்கை கேட்டிருக்கிறார். அதுபற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. சில நேரங்களில் இப்படிப்பட்ட ஆய்வுக் கூட்டங்கள் ஏதும் இன்றியே முதல்வர் வந்திருக்கிறார். ஆனால் இப்போது முறையான ஆய்வுக் கூட்டம், தீவிர ஆலோசனை என்று நடப்பதைப் பார்த்தால் சேலத்துக்கு முதல்வர் கொடுக்கும் முக்கியத்துவம் தெரிகிறது. முதல்வர் வழங்கப்போகும் நலத்திட்ட உதவிகள் பற்றிய விவரங்கள், அவரது பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் பற்றியெல்லாம் விவாதிக்கப்பட்டது” என்கிறார்கள்.

அரசு அதிகாரிகள் ஒருபக்கம் என்றால் இன்னொரு பக்கம் முதல்வரின் வருகைக்காக சேலம் அதிமுகவும் தயாராகிறது. அதிமுகவிலும் ஆலோசனைக் கூட்டங்கள் ஆங்காங்கே நடந்திருக்கின்றன. சேலம் எம்.பி. தொகுதி எந்த அளவுக்கு இருக்கிறது, மக்களுக்கு இன்னும் என்ன செய்யவேண்டும் என்பது பற்றியெல்லாம் விவாதித்து அரசு லெவல், அரசியல் லெவல் இரண்டு வகையிலும் தேர்தலுக்குத் தயாராகிவிட்டார் எடப்பாடி.

வெள்ளி, 7 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon