மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 டிச 2018

உருளைக்கிழங்கு ஆய்வு மையத்தை மூடக் கூடாது!

உருளைக்கிழங்கு ஆய்வு மையத்தை மூடக் கூடாது!

உதகையில் செயல்படும் உருளைக்கிழங்கு ஆய்வு மையத்தினை மூடுவதற்கு மத்திய அரசு முடிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

உதகையில் மத்திய உருளைக்கிழங்கு ஆய்வு மையம் (Central Potato Research Station - CPRS ) செயல்பட்டு வருகிறது. தென்னிந்தியா முழுமைக்கும் இது ஒரே ஆய்வு மையமாகச் செயல்பட்டு வருகிறது. உருளைக்கிழங்கு பயிர்களுக்கு வரும் பெரிய நோய்கள்மீது ஆய்வு நடத்தப்பட்டு அந்த நோய்களைத் தடுத்து விவசாயிகளுக்கு உதவி வருகிறது. தற்போது இந்திய விவசாய ஆராய்ச்சிக் கவுன்சில், உருளைக்கிழங்கு ஆய்வு மையத்தை மூடிட முடிவு செய்துள்ளதை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:

ஊடகச் செய்திகளிலிருந்து இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சில் தமிழகத்திலேயே சிறந்த நிறுவனமான சிபிஆர்எஸ் என்றழைக்கப்படும் உருளைக்கிழங்கு ஆய்வு மையத்தை மூடிட முடிவு செய்துள்ளதாக அறிகிறோம். சிபிஆர்எஸ் என்பது உருளைக்கிழங்குகளைப் பெரிய அளவில் பாதிக்கும் சிஸ்ட் நெமடோடு மற்றும் இயர்லி பிளைட் என்ற பெரிய நோய்கள் குறித்து ஆராய்ச்சி நடத்தி வருகிறது. இதன்மூலம் இந்த நோய்களைத் தடுத்து உருளைக்கிழங்கு சாகுபடியை விவசாயிகள் லாபகரமான முறையில் மேற்கொள்ள சிபிஆர்எஸ் உதவி வருகிறது.

1985இல் நெமடோட் எதிர்ப்பு உருளைக்கிழங்கு வகைகளை உற்பத்தி செய்து வெளியிட்டது. அந்த வகை உருளைக்கிழங்குகள் உதகையில் பல இடங்களில் வளர்க்கப்படுகிறது.

நாட்டிலுள்ள இரண்டு ஆய்வு மையங்களில் இது ஒன்றாகும். இதை மூடிவிட்டால் விவசாயிகள் எங்கே நோயில்லாத உருளைக்கிழங்கு விதைகளைப் பெறுவார்கள். இதை விட்டால் இன்னொரு ஆய்வு மையம் பஞ்சாபிலுள்ள ஜலந்தரில்தான் உள்ளது. அது விவசாயிகளுக்கு மிகவும் தொலைவிலுள்ள ஆய்வு மையமாகும்.

தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களிலுள்ள மலைகளில் உருளை பயிரிடப்பட்டு வருகிறது. இதில் தமிழகத்தில் 5,500 ஹெக்டேர் நிலங்களில் பயிரிடப்பட்டு வருகிறது.1957இல் தொடங்கப்பட்ட சிபிஆர்எஸ் நிறுவனம் கடந்த 70 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு சேவை செய்து வருகிறது. இந்த ஆய்வு மையத்தில் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட கருவிகளுடன் பரிசோதனைக் கூடம் உள்ளது. எனவே, தமிழ்நாடு மட்டுமின்றி தென்னிந்திய விவசாயிகளின் நலன் கருதி ஆய்வுக் கூடத்தை மூடக் கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வெள்ளி, 7 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon