மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 டிச 2018

கேரளா: சாதியத்தின் பின்னால் இருக்கும் தேர்தல் கணக்குகள்!

கேரளா: சாதியத்தின் பின்னால் இருக்கும் தேர்தல் கணக்குகள்!

உதய் பாடகலிங்கம்

சபரிமலையில் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு அனுமதியளித்ததன் மூலமாக, தேசிய அளவில் மிகப்பெரிய விவாதங்களைப் பரிசளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். அவற்றுள் ஒன்று, கேரளாவில் இப்போதும் சாதியம் உயிர்ப்போடு உள்ளது என்ற உண்மை குறித்தது. இந்தியாவில் எந்த மாநிலமும் இதுவரை சமத்துவத்தை 100 சதவிகிதம் எட்டவில்லை தான். ஆனால், கல்வியறிவிலும் பொருளாதார வளத்திலும் சமூக முன்னேற்றத்திலும் சிறந்து விளங்கும் கடவுளின் தேசத்தில் சாதியம் தலைவிரித்தாடுகிறதா? ஆம் என்ற பதிலை அழுத்தமாகச் சொல்வதோடு, அந்த மாநிலத்தின் தேர்தல் கணக்குகளையும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அதுவே மாற்றி எழுதுகிறது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டியிருக்கிறது.

2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, கேரளாவில் இந்துக்கள் 54.73%, முஸ்லிம்கள் 26.56%, கிறிஸ்தவர்கள் 18.38% என்ற அளவில் வசித்து வருகின்றனர். புத்தம், சீக்கியம், யூதம் உள்ளிட்ட பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் 0.33 சதவிகிதம் பேர் உள்ளனர்.

கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக, கேரளாவில் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் சமூக, பொருளாதாரத் தளங்களில் செல்வாக்கு பெற்றவர்களாக விளங்குகின்றனர். இதனால், அவர்களது அரசியல் பின்னணியும் வலுவானதாக உள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் தவிர்த்து என்ஜினியரிங் உள்ளிட்ட முதன்மைக் கல்வி சார்ந்த கல்லூரிகளை இம்மத நிறுவனங்களே நடத்திவருகின்றன.

காங்கிரஸுக்கு ஆதரவு

கிறிஸ்தவ மதத்தில் சிரியன் உள்ளிட்ட பல்வேறு உட்பிரிவுகளைச் சார்ந்தவர்கள் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கின்றனர் அல்லது காங்கிரஸில் பிரிந்து மீண்டும் ஜனநாயக முற்போக்கு முன்னணியில் தொடர்ந்துவரும் சிறுகட்சிகளை ஆதரிக்கும் மனநிலையில் உள்ளனர். மற்ற உட்பிரிவுகள் இருந்தாலும், கிறிஸ்தவ மக்களின் ஆதரவு மார்க்சிஸ்ட் உள்ளிட்ட இதர கட்சிகளுக்கு பெருமளவில் கிடைக்கவில்லை. பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் மற்றும் வயநாட்டின் சில பகுதிகளில் இம்மதத்தினர் அதிகளவில் வசித்து வருகின்றனர். இந்த தொகுதிகளில் பெரும்பாலும் காங்கிரஸ் உறுப்பினர்களே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்குப் பேட்டியளித்த கத்தோலிக்க பாதிரியார் ஜோசப் பொவதில், ஐக்கிய முற்போக்கு முன்னணி கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக வெளிப்படையாக அறிவித்தார். இதனால், அம்மதத்தைச் சார்ந்தவர்களுக்குத் தனிப்பட்ட அரசியல் விருப்பு வெறுப்புகள் இருக்காது என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது.

சரியும் முஸ்லிம் லீக் செல்வாக்கு

முஸ்லிம் மக்களை பொறுத்தவரை, அவர்களுக்கான கட்சியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பல ஆண்டுகளாக இருந்துவருகிறது. முஸ்லிம்களின் ஆர்எஸ்எஸ் என்றழைக்கப்படும் எஸ்டிபிஐ போன்ற கட்சிகளுக்குத் தற்போது இளைஞர்கள் ஆதரவளித்து வருகின்றனர். பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் காரணத்தால், இளைஞர்களின் ஆதரவை முஸ்லிம் லீக் இழந்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், இக்கட்சி காங்கிரஸ் கூட்டணியில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

கேரளாவின் வடபகுதியிலுள்ள காசர்கோடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் அதிகளவில் முஸ்லிம் மக்கள் வசித்து வருகின்றனர். மலபார் பகுதிகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இப்போதும் தனது செல்வாக்கைத் தக்க வைத்துள்ளது.

காங்கிரஸும் மார்க்சிஸ்ட்டும் சிறுபான்மையின மக்களுக்காகக் குரலை உயர்த்தியபோது, தங்களுக்காகப் பேச யாருமில்லையே என்ற சாதாரண இந்து மக்களின் குரல் மெல்ல உயர்ந்தது. இதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த முனைந்தது பாஜக.

சாதியினால் பிரியும் வாக்குகள்

கிறிஸ்தவ, முஸ்லிம் மக்களைப் போல் அல்லாமல் இந்து மக்களின் வாக்கு வங்கியானது சாதி வாரியாகப் பிரிந்து காணப்படுகிறது. கேரளாவின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக ஈழவர்கள், தீயர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 22.6% அளவில் உள்ளனர். நாராயண குருவின் வழியில் சமத்துவத்தை வலியுறுத்தி வந்த இதன் தலைவர்கள், மார்க்சிஸ்ட் கட்சியைத் தங்களுடையதாகப் பல ஆண்டுகளுக்கு முன்னரே தேர்ந்தெடுத்தனர். இப்போது வரை அந்த நிலை தொடர்கிறது.

நாயர் சமூகத்தவர் சுமார் 14.5% அளவில் கேரளாவில் வசிக்கின்றனர். மத்திய மற்றும் தெற்கு மாவட்டங்களான திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், பாலக்காடு பகுதிகளில் இவர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். நிலவுடைமைச் சமூகமாக இருந்த காரணத்தால் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகளில் இச்சமூகத்தவர் அதிகளவில் பங்கு வகித்துவருகின்றனர். இவர்களது கவன ஈர்ப்பை முழுமையாக அறுவடை செய்யும் விதமாக சபரிமலை போராட்டத்தைப் பயன்படுத்த முனைந்துள்ளது பாஜக.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் நாயர் சர்வீஸ் சொசைட்டியின் பட்ஜெட் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தார் நடிகரும் பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினருமான சுரேஷ் கோபி. இதனால். தமது சமூகத்துக்குக் குறிப்பிட்ட கட்சியின் சாயம் பூசப்படும் என்று நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவிக்கவே, சுரேஷ் கோபி அங்கிருந்து வெளியேறினார். மூன்று கட்சிகளிடம் இருந்தும் இச்சமூகத்தினர் ஒரே தூரத்தில் உள்ளதாக வெளிக்காட்டியது இந்த நிகழ்வு.

பிராமண சமூகம் கேரளாவின் மாற்றங்களுக்குக் காரணமாக இத்தனை ஆண்டுகாலம் இருந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. 1.6% அளவில் உள்ள இச்சமூகத்தில் இருந்து ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் போன்ற மார்க்சிஸ்ட் தலைவர்கள் வந்துள்ளனர். ஆனாலும், தற்போது காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு இச்சமூகத்தினர் ஆதரவு தருவதில்லை என்று கூறப்படுகிறது.

நாட்டார், விஸ்வகர்மா உள்ளிட்ட இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் ஆதரவும் மார்க்சிஸ்ட் கட்சியைச் சார்ந்தே உள்ளது. 1.4 சதவிகிதம் அளவில் பழங்குடி மக்கள் வசித்துவருகின்றனர். பல ஆண்டுகளாக, இவர்கள் காங்கிரஸ் கட்சியையே சார்ந்து இருந்துவருகின்றனர்.

கேரளாவில் பட்டியல் இனத்தவர் 8% அளவில் உள்ளனர். இதிலுள்ள 64 சமூகத்தவரில் புலையர் சமூகத்தினர் மிக அதிக அளவில் உள்ளனர். இதற்கடுத்த இடங்களில் செருமன், குறவன், பறையன், கணக்கன், தண்டன், வெட்டுவான் போன்ற சமூகத்தினர் உள்ளனர். செருமன் சமூகத்தைத் தவிர மற்ற சமூகத்தினர் சில ஆயிரங்கள் எண்ணிக்கையில் உள்ளனர். கல்வியறிவில் பெரும் முன்னேற்றம் கண்டிருந்தாலும், இவர்கள் விவசாயக் கூலிகளாகவும், தொழிலாளர்களாவும் இருந்து வருகின்றனர். காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சி சார்ந்து இயங்கிய பட்டியல் இனத்தவரைத் தம் பக்கம் இழுக்கும் முயற்சியில் உள்ளது பாஜக.

யாருக்கு ஆதரவு?

கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களின் ஆதரவு குறிப்பிட்ட கட்சிக்கு இருப்பதைப் போல, சாதிரீதியாகப் பிரிந்து கிடக்கும் இந்துக்களின் வாக்குகளை ஒருங்கிணைக்க முயன்று வருகிறது பாஜக. இதனால் மார்க்சிஸ்ட் கட்சிக்குதான் பாதிப்பு என்று அரசியல் ஆய்வாளர்கள் எதிர்பார்த்த நிலையில், கடந்த பத்தாண்டு கால தேர்தல் கணக்குகள் அதிலிருந்து முரண்பட்டுள்ளன.

2016 கேரள சட்டமன்றத் தேர்தல் குறித்து ஆய்வு மேற்கொண்ட மக்கள் கொள்கைகளுக்கான ஆய்வு மையம் தனது அறிக்கையில் ஒரு புள்ளிவிவரமொன்றைத் தந்துள்ளது. 2006 தேர்தலை ஒப்பிடுகையில், 2011 சட்டமன்றத் தேர்தலில் கேரள பாஜக 1.33% வாக்குகளை அதிகம் பெற்றது. 2016 தேர்தலில் இது 8.58% ஆக உயர்ந்தது. இதே ஆண்டில் காங்கிரஸ் 7.09 சதவிகித வாக்குகளையும், மார்க்சிஸ்ட் கட்சி 7.09 சதவிகித வாக்குகளையும் இழந்தது. இந்த புள்ளிவிவரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியைவிட, காங்கிரஸ் கட்சியே பாஜகவினால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவருகிறது.

இந்துக்கள் என்ற அடிப்படையில் சாதிரீதியாகப் பிரிந்துகிடக்கும் வாக்குகளை ஒருங்கிணைக்கும் முயற்சியினால் கிடைத்த பலன் இது. காங்கிரஸ் வாக்கு வங்கியில் சரிவை ஏற்படுத்தி, தன்னை பலப்படுத்தி வருகிறது பாஜக. இதனால்தான் கேரளாவில் ஈழவர்களுக்கும் நாயர்களுக்கும் இடையே திரைமறைவில் இருந்துவரும் பகைமையை அகற்றி, இரு சமூகத்தினரையும் ஓரணியில் கைகோர்க்க வைத்துள்ளது.

தீர்ப்புக்கு எதிராகப் பெண்கள்

சபரிமலை தீர்ப்பைப் பொறுத்தவரை, முன்னொரு காலத்தில் வரையறுக்கப்பட்ட வர்ண அடுக்குகளில் கீழ் நிலையில் இருக்கும் பட்டியல் வகுப்பினரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் சில பிரிவுகளும் சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் நுழையலாம் என்ற தீர்ப்பை வரவேற்றிருக்கின்றன. பிராமணர்கள், நாயர்கள் உள்ளிட்ட சில சமூகத்தினர் இத்தீர்ப்பை எதிர்த்து வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர். முக்கியமாக நம்பூதிரிகள், பட்டாத்திரிபட்கள் உள்ளிட்ட பிராமணர்களுக்கான யோக ஷேம சபாவும், நாயர் சர்வீஸ் சொசைட்டியும் மிகப்பெரிய அளவில் பெண்களை இப்போராட்டத்தில் களமிறக்கியிருக்கின்றன.

ஆதரவு திரட்டும் மார்க்சிஸ்ட்

சபரிமலை தீர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து கேரள மாநிலம் முழுவதும் மனிதச் சங்கிலி போராட்டத்தை அறிவித்தது மார்க்சிஸ்ட் கட்சி. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில், பாஜக சார்பாக ஈழவ சமுதாயத்தின் வாக்குகளைத் திரட்டிவருவதாகக் கூறப்படும் ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் அமைப்பின் தலைவர் வெள்ளப்பள்ளி நடேசன் கலந்துகொண்டார். முதலமைச்சர் பினராயி விஜயன் அருகிலேயே அமர்ந்து, தனது ஆதரவைத் தெரிவித்தார்.

நடேசனின் மகன் துஷார் வெள்ளப்பள்ளி, பாஜகவின் ஆதரவாளராக சபரிமலை தீர்ப்புக்கு எதிரான போராட்டங்களில் கலந்துகொண்டு வருகிறார். இவர், நாராயண தர்ம பரிபாலன யோகம் அமைப்பின் அரசியல் முகமான பாரத் தர்ம ஜென சேனா எனும் கட்சியின் தலைவராகவும் இருந்து வருகிறார்.

தலித் சமூகத்தில் பெரும்பான்மையாக விளங்கும் புலையர் சமூகம் சார்ந்த கேரள புலையர் மகா சபா, பினராயி விஜயனின் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தது. இது, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரித்து வந்தது. இந்த அணி திரட்டல்களால் பெரும் சரிவைச் சந்தித்திருப்பது காங்கிரஸ் கட்சி மட்டுமே.

சபரிமலை தீர்ப்பானது குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த மக்களின் அரசியல் ஆதரவை மாற்றும் வல்லமை படைத்ததாக மாறி வருகிறது. இதுவே தீர்ப்பு இப்படி அமைந்திருக்காவிட்டால் எப்படிப்பட்ட விளைவுகள் ஏற்பட்டிருக்கும் என்ற எண்ணத்தை வலுவாக்குகிறது.

(தொடரும்..)

சபரிமலை தீர்ப்பினால் பாஜக கை ஓங்குகிறதா?

சட்டமன்றம் நோக்கித் திரும்பும் பாஜகவின் கவனம்!

இரண்டாவது இடம் என்ற பாஜகவின் இலக்கு!

கேரளா: தொடரும் எதிரும் புதிரும் விளையாட்டு!

வெள்ளி, 7 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon