மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 டிச 2018

அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்: ஒத்துழைத்த அதிமுகவினர்!

அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்: ஒத்துழைத்த அதிமுகவினர்!

மணல் குவாரியைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம் செய்த தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு ஆதரவாக, அதிமுக பொறுப்பாளர்களே கூட்டத்தைக் கூட்டியுள்ளதாக முதல்வரிடம் புகார் சென்றுள்ளது.

பண்ருட்டி அருகே உள்ளது எனதிரிமங்கலம். இங்குள்ள தென்பெண்ணையாற்றில் அரசு மணல் குவாரி இயங்கி வருகிறது. இந்த மணல் குவாரிக்கு அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, விவசாயம் பாதிக்கப்படுவதாக அவர்கள் கூறி பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் டிசம்பர் 5ஆம் தேதி குவாரி முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறிவித்திருந்தது.

பொதுவாக அரசுக்கு எதிராகப் போராட்டம், விவசாயிகள் போராட்டம், எதிர்க்கட்சிகள் போராட்டம் என்றால் குறிப்பிட்ட பகுதியையும், சம்பந்தப்பட்ட கட்சியினரின் செல்போன் எண்களையும் உளவுத் துறை கண்காணிப்பது வழக்கம். அந்த வகையில், மணல் குவாரி உரிமையாளர்கள், சில கட்சியின் பொறுப்பாளர்கள் செல்போன் எண்கள் கடந்த மூன்றாம் தேதியிலிருந்து கண்காணிக்கப்பட்டு வந்தன. அதில் மணல் குவாரி பிரமுகர்களிடம் ஆளும்கட்சி பிரமுகர் உட்படப் பல கட்சியினர் பேசிய உரையாடல்களைக் கேட்டு அதிகாரிகளே அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனையடுத்து மேலிடத்திலிருந்து மாவட்ட அதிகாரிகளைத் தொடர்புகொண்டு முற்றுகைப் போராட்டத்தில் என்ன நடக்கிறது என்று மக்களோடு மக்களாக நின்று தகவல் அளியுங்கள் என்று உத்தரவு வந்துள்ளது. இதற்கிடையே நேற்று முன்தினம் (டிசம்பர் 5) எனதரிமங்கலத்தில், வேல்முருகன் தலைமையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சேர்ந்தவர்கள் எவ்வளவு பேர், அதிமுக பிரமுகர்கள் கூட்டிய கூட்டம் எவ்வளவு, தலைக்கு எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்ற விவரங்களைத் திரட்டிய காவல் துறையினர் தலைமைக்கு அனுப்பியுள்ளனர்.

அதாவது, அதிமுக தொகுதி பொறுப்பாளர் ராமசாமியும், அதிமுக பொறுப்பாளர் பாண்டு என்பவரும் சுற்றுப்புறத்திலுள்ள கிராம மக்களைத் திரட்ட பணம் விநியோகம் செய்துள்ளார்கள் என்ற தகவல் முதல்வர் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாம். இதுதொடர்பாக பண்ருட்டி தொகுதி பெண் எம்.எல்.ஏ.வான சத்யாவின் கணவர் பன்னீர்செல்வமும் முதல்வரிடம் புகார் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

சத்யா பன்னீர்செல்வம், கடலூர் எம்.பி அருள்மொழித்தேவன் கோஷ்டியைச் சேர்ந்தவர். மணல் குவாரிக்கு எதிராகப் போராட்டத்துக்கு ஆட்களைத் திரட்டியதாகச் சொல்லப்படும் ராமசாமி, அமைச்சர் சம்பத் ஆதரவாளர் என்று கூறுகிறார்கள் அதிமுகவினர்.

இதுதொடர்பாக ராமசாமியைத் தொடர்புகொண்டு அவர் மீதுள்ள குற்றச்சாட்டுகளைக் கேட்டோம், “ஏற்கெனவே மணலையெல்லாம் சுரண்டி எடுத்தாச்சு, இனிமேல் மணல் எடுத்தால் நிலத்தடி நீர் பாதிக்கும். அதனால் விவசாயமும் பாதிக்கும். ஆகையினால்தான் ஊர் மக்களே ஒன்றுகூடி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் நடத்திய போராட்டத்தில் கலந்துகிட்டாங்க. அவர்களைக் கலந்துகொள்ள வேண்டாம் என்று நான் தடுக்க முடியாது” என விளக்கம் அளித்தார்.

மணல் குவாரி விவகாரத்தில் ஆட்சிக்கு எதிராக ஆளும்கட்சியினரே இறங்கியுள்ளது மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளி, 7 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon