மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 டிச 2018

தமிழுக்கு வரும் ‘மெக்பத்’!

தமிழுக்கு வரும் ‘மெக்பத்’!

ஜெய், நஸ்ரியா இணைந்து நடித்த திருமணம் எனும் நிக்காஹ் படத்தை இயக்கியவர் அனிஸ். தற்போது இவர் இயக்கவுள்ள புதிய படம், ஷேக்ஸ்பியரின் மெக்பத் நாடகத்தைத் தழுவி உருவாகவுள்ளது.

கன்னடத்தில் வெளியான லூசியா படத்தில் நடித்த சதிஷ் நினாஸம், சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகிவரும் ஏஞ்சலினா படத்தில் நடித்துள்ள சரண் சஞ்சய், அறிமுக நடிகை நிராஷா ஆகியோர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். இவர்கள் அனைவரும் தேசிய நாடகப் பள்ளியில் பயின்றவர்கள். இந்தப் படத்துக்கு ‘பகைவனுக்கு அருள்வாய்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டு வெளியான திருமணம் எனும் நிக்காஹ் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை. தற்போது நான்காண்டுகளுக்குப் பின் மீண்டும் களமிறங்கியுள்ள அனிஸ் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்பில் உள்ளார். நவீன நாடகப் பின்னணியில் இருந்து திரைக்கு வந்த அனிஸ், பல்வேறு நாடகங்களை இயக்கி நடித்துள்ளதோடு நடிப்புக்கான பயிற்சிப் பட்டறைகளையும் நடத்தியுள்ளார். இந்த நிலையில் ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற துயர நாடகமான மெக்பத்தைத் தழுவி திரைக்கதை அமைத்துள்ளார். மெக்பத்தை அடிப்படையாகக் கொண்டு உலக அளவில் பல படங்கள் வெளிவந்துள்ளன.

அடுத்த ஆண்டு படப்பிடிப்பு நடைபெறவுள்ள இந்தப் படம் சமகால அரசியல், சமூக பிரச்சினைகளோடு எளிதில் தொடர்புபடுத்திப் பார்க்கும் வகையில் உருவாக உள்ளது.

ஜிப்ரான் இசையமைக்கவுள்ள இந்தப் படத்தில் லண்டனைச் சேர்ந்த அனன்யா ராஜேந்திரகுமார் என்ற ஒன்பது வயது சிறுமி பாடல் எழுதியுள்ளார். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு நிறைவடைந்ததும் படப்பிடிப்பு குறித்த தகவல்கள் வெளியாக உள்ளன.

வெள்ளி, 7 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon