மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 டிச 2018

அந்த 12 சதவிகிதம் சாதாரணமானதல்ல!

அந்த 12 சதவிகிதம் சாதாரணமானதல்ல!

சிவா

‘இப்பலாம் யார் சார் டெஸ்ட் மேட்ச் பாக்குறது?’ என மிகச் சாதாரணமாகக் கடந்து செல்லக்கூடிய கேள்வி எத்தனை அநாவசியமானது என்பதை சில டெஸ்ட் போட்டிகள் நமக்கு உணர்த்திவிடும். அப்படிப்பட்ட ஒரு போட்டியைத்தான் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி காட்டியிருக்கிறது.

கிரிக்கெட் போட்டி ஒருபக்கம் நடைபெற, இன்னொரு பக்கம் யார் வெற்றி பெறுவார்கள் என்ற ஓட்டுப் பதிவை டிவி சேனல்கள் நடத்திக்கொண்டிருக்கும். தனியாகப் போராடிக்கொண்டிருந்த சத்தேஸ்வர் புஜாராவுடன் ரவிச்சந்திரன் அஸ்வின் இணைவதற்கு முன்பு வரை 24 சதவிகிதம் பேர் இந்தியா வெற்றி பெறும் என்று தெரிவித்திருக்க, அந்த ஜோடி 50 ரன்களைக் கடந்தபோது 36 சதவிகிதத்தினர் இந்தியா வெற்றி பெறும் எனக் கூறியிருந்தார்கள். அங்கு வளர்ந்த 12 சதவிகிதம் இந்தியாவின் வெற்றிக்கானது மட்டுமல்ல; டெஸ்ட் போட்டிகள் இனியும் தேவையா எனக் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில்.

புஜாராவின் மீது மொத்த நாட்டின் நம்பிக்கையையும் வைத்துவிட்டுக் காத்திருந்தவர்களுக்கு சீரான இடைவெளியில் அதிர்ச்சிகளை புஜாரா கொடுத்தது, எந்த ஒருநாள் போட்டிக்கும், டி-20 போட்டிக்கும் சளைத்தது அல்ல. 63ஆவது ஓவரில் ஸ்டார்க் வீசிய பந்தினை ஆஃப் திசையில் புஜாரா தட்டிவிட நினைத்தபோது, பேட்டின் ஓரத்தில் பட்டு அது உஸ்மான் கவாஜாவுக்கு அருகே சென்றது. ஆனால், அவர் முயன்றும் பிடிக்க முடியாததால் நான்கு ரன்கள் கிடைத்தன. அதேபோல 71ஆவது ஓவரில் லியோன் வீசிய பந்து, புஜாராவின் காலில் பட்டுச்சென்றது. ஆனால், அது புஜாராவின் பேட்டில் பட்டு வந்ததாக நினைத்துப் பிடிக்கச்சொல்லி கீப்பர் குரலெழுப்பிய சமயத்தில் போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களும் தலையில் கைவைத்து அமர்ந்திருந்தார்கள்.

புஜாரா தனது சதத்தினை நெருங்கிக்கொண்டிருந்தபோது பவுண்ட்ரிகளை விளாசத் தொடங்கினார். ஒருநாள் போட்டிகளிலேயே நடப்பதற்கு அரிதான இந்த நிகழ்வினை புஜாரா செய்துகாட்டியபோது எதிரணியினரே கைதட்டினார்கள். ஏனென்றால், புஜாரா அடித்த ஒவ்வொரு ரன்னும் இந்திய அணியை கவுரவமான நிலைக்குக் கொண்டுசென்றது.

புஜாரா ரன் அவுட் செய்யப்பட்டபோது, அதிகமாக ரன் அவுட் ஆகும் இந்திய வீரர்களில் திராவிட் (13), சச்சின் (9) ஆகியோருக்கு அடுத்த படியாக அதிகமுறை ரன் அவுட் (8 முறை) செய்யப்பட்ட இந்திய வீரர் என்ற பெயர் புஜாராவுக்குக் கிடைத்தது பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். ஒரு நாள் முழுவதும் விளையாடிக் களைத்துப்போயிருந்த புஜாரா ஹசில்வுட்டின் ஓவரில் இரண்டிரண்டு ரன்களாக ஓடி எடுத்தார். தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்தவரை திடீரென பாய்ந்து வந்த பாட் கம்மின்ஸ் அவுட் செய்தது தற்செயலாக நடைபெற்ற ஒன்றென அந்த ஓவர் முழுவதையும் கவனித்தவர்களால் சொல்ல முடியாது.

இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கிய முதல் பந்திலேயே ஷமி தனது விக்கெட்டைப் பறிகொடுத்து, இரண்டாவது நாள் ஆட்டம் முழுவதையும் ஆஸ்திரேலியாவுக்குக் கொடுத்துவிட்டார். புதிய பந்தில் தொடங்கும் ஆட்டம் எதையும் மாற்றக்கூடியது என சச்சின் சொல்லியிருந்தது போல, இன்றைய ஆட்டம் என்னவாக இருக்கப்போகிறது என்பதை, அப்பந்தினைச் சுழலச்செய்யும் பவுலர்களே தீர்மானிக்கப்போகிறார்கள். 250 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தனது முதல் இன்னிங்க்ஸை முடித்தது இந்திய அணி. நேரத்தை வீணாக்காமல், ஆஸ்திரேலிய அணியின் ஓப்பனர்களாக ஆரோன் ஃபிஞ்ச், மார்கஸ் ஹாரிஸ் ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரை வீசிய இஷாந்த் ஷர்மா மூன்றாவது பந்திலேயே ஃபின்ச் விக்கெட்டை வீழ்த்தினார். தொடக்கத்தில் ஏற்பட்ட இந்த அதிர்ச்சியைச் சமாளித்து ஆஸ்திரேலியா ஆடிவருகிறது. உஸ்மான் கவாஜாவும் ஹாரிஸும் பதற்றமில்லாமல் இன்னிங்ஸைக் கட்டமைத்துவருகிறார்கள்.

வெள்ளி, 7 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon