மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 டிச 2018

சரிவை நோக்கிப் பொருளாதார வளர்ச்சி!

சரிவை நோக்கிப் பொருளாதார வளர்ச்சி!

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது மதிப்பீட்டை ஃபிட்ச் நிறுவனம் குறைத்துக் கொண்டுள்ளது.

நிதிச் செலவுகள் அதிகரிப்பு மற்றும் குறைந்த கடன் வசதி போன்ற காரணங்களால் நடப்பு 2018-19 நிதியாண்டுக்கான இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது மதிப்பீட்டை ஆய்வு நிறுவனமான ஃபிட்ச் 7.2 சதவிகிதமாகக் குறைத்துக் கொண்டுள்ளது. முன்னதாக ஜூன் மாதம் இந்நிறுவனம் வெளியிட்டிருந்த மதிப்பீட்டறிக்கையில், 2018-19ஆம் ஆண்டில் 7.4 சதவிகித வளர்ச்சியையும், 2019-20ஆம் ஆண்டில் 7.5 சதவிகித வளர்ச்சியையும் இந்தியா கொண்டிருக்கும் என்று கணித்திருந்தது. தற்போதைய மதிப்பீட்டில், 2019-20ஆம் ஆண்டில் 7 சதவிகிதமாகவும், 2020-21ஆம் ஆண்டில் 7.1 சதவிகிதமாகவும் மட்டுமே இந்திய வளர்ச்சி இருக்கும் எனவும் இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் காலாண்டு வாரியாகப் பார்த்தால், ஏப்ரல் - ஜூனில் 8.2 சதவிகிதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி ஜூலை - செப்டம்பர் காலாண்டில் மிக மோசமாக 7.1 சதவிகிதமாகக் குறைந்தது. நுகர்வில் பாதிப்பு, இந்திய ரூபாய் மதிப்பில் வீழ்ச்சி போன்ற காரணிகளும் இந்திய வளர்ச்சிக்குத் தடையாக அமைந்துள்ளன. பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக நிதிக் கொள்கைகளில் இந்தியா சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று ஃபிட்ச் நிறுவனம் ஆலோசனை தெரிவித்துள்ளது. இதன் மதிப்பீட்டின்படி, 2019ஆம் ஆண்டில் இந்திய ரூபாயின் மதிப்பு 75 டாலர் வரையில் குறைய வாய்ப்புள்ளது.

வெள்ளி, 7 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon