மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 டிச 2018

மயிலாப்பூர் கோயில் சிலை: குழு விசாரணை!

மயிலாப்பூர் கோயில் சிலை: குழு விசாரணை!

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மயில் சிலை மாற்றப்பட்டது தொடர்பான வழக்கை விசாரிக்க மூவர் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது தமிழக அரசு.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள மயில் சிலை மாற்றப்பட்டது தொடர்பான வழக்கில், டிவிஎஸ் தலைவர் வேணு சீனிவாசன், முத்தையா ஸ்தபதி, அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் திருமகள், அறநிலையத் துறை ஆணையர் தனபால் உள்ளிட்டோர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். கடந்த நவம்பர் 28ஆம் தேதியன்று டிவிஎஸ் நிறுவத்தின் தலைவர் வேணு சீனிவாசன், முத்தையா ஸ்தபதி உட்பட 3 பேருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கினர் நீதிபதிகள். அதே நேரத்தில்

இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் திருமகளுக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது எனத் தெரிவித்து அவரின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

நீதிபதிகள் ஆர். மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு, நேற்று (டிசம்பர் 6) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மயில் சிலை விவகாரத்தை விசாரிப்பதற்காகச் சிறப்புக் குழு அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறினார் இந்துசமய அறநிலையத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர். ராமேஸ்வரம், மதுரை கோயில் இணை ஆணையர்கள், அறநிலையத் துறை ஆய்வாளர் கொண்ட மூவர் குழு இது குறித்து விசாரணை மேற்கொள்ளுமென்று தெரிவித்தார். இந்த குழுவின் விசாரணை அறிக்கையை 2 வார காலத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர் நீதிபதிகள். இது குறித்துச் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் ஏற்கனவே நடத்தி வந்த விசாரணையைத் தொடரலாம் என அறிவுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, சிறப்பு அமர்வு முன்பாக ஸ்ரீரங்கம் கோயில் கும்பாபிஷேகத்தின்போது சிலைகள், கதவுகள், நகைகள் மாற்றப்பட்டதாக வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தன. அப்போது, சிலைக் கடத்தலில் ஈடுபடும் வெளிநபர்கள் மட்டுமே சிக்குவதாகவும், நகைகளைத் திருடிய இந்து சமய அறநிலையத் துறையினர் கைது செய்யப்படுவதில்லை எனவும் மனுதாரர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கில் ஒரு வார காலத்தில் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு நீதிபதிகள் ஆர். மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு உத்தரவிட்டது.

வெள்ளி, 7 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon