மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 டிச 2018

சிறப்புக் கட்டுரை: புதிய பயிர்க் காப்பீடும் பாஜகவின் தோல்வியும்!

சிறப்புக் கட்டுரை: புதிய பயிர்க் காப்பீடும் பாஜகவின் தோல்வியும்!

கபிர் அகர்வால் & தீரஜ் மிஷ்ரா

2016ஆம் ஆண்டு ஜனவரியில் சீரமைக்கப்பட்ட பயிர்க் காப்பீட்டுத் திட்டமாக பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். “விவசாயிகளின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை இந்தத் திட்டம் உருவாக்கும்” என்று மோடி அப்போது கூறியிருந்தார்.

ஆனால், இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்ட காலத்திலிருந்து தற்போது வரை 0.42 விழுக்காடு விவசாயிகள் மட்டுமே இதில் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளனர். ஆனால், காப்பீட்டு நிறுவனங்களுக்குச் செலுத்தப்பட்ட பிரீமியம் தொகை மட்டும் 350 விழுக்காடு அதிகரித்துள்ளது. வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் தி வயர் ஊடகத்துக்குத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு அளித்துள்ள பதிலில் இது தெரியவந்துள்ளது.

அனைத்துச் சிறந்த திட்டங்களையும் உள்ளடக்கி, அதன் சிறப்பான அம்சங்களை இணைத்து, பழைய திட்டத்தில் இருந்த குறைபாடுகள் நீக்கப்பட்டு இந்தப் புதிய பயிர்க் காப்பீடு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக இந்தத் திட்டத்தை அறிவித்தபோது மோடி அரசு கூறியது. இந்தப் புதிய திட்டத்தில் குறைந்த தொகையை பிரீமியமாகச் செலுத்தினால் போதுமென்றும், தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி, முந்தைய திட்டத்தைக் காட்டிலும் மிக விரைவாக விவசாயிகளுக்கு காப்பீட்டுப் பணம் கிடைக்கச் செய்வோம் என்றும் கூறியிருந்தார்கள்.

அரசு கூறியது நடந்ததா?

பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா திட்டமானது 2016-17 மற்றும் 2017-18ஆம் ஆண்டுகளில் இரண்டு பருவங்களிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டுகளில் தனியார் மற்றும் அரசு காப்பீட்டு நிறுவனங்கள் ரூ.47,408 கோடியை பிரீமியம் தொகையாக வசூலித்துள்ளன. ஆனால் அக்டோபர் 10, 2018 கணக்குப்படி உரிமம் கோரப்பட்டு வழங்கப்பட்ட பணத்தின் மொத்த மதிப்பு ரூ.31,613 கோடி மட்டுமே.

2014-15 மற்றும் 2015-16ஆம் ஆண்டுகளில் முந்தைய பயிர்க் காப்பீட்டுத் திட்டங்களான தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட தேசிய வேளாண் காப்பீட்டு திட்டம் ஆகியவற்றின் கீழ் வசூலிக்கப்பட்ட மொத்த பிரீமியம் தொகையின் மதிப்பு ரூ.10,560 கோடி. ஆனால், அந்தக் காலகட்டத்தில் உரிமம் கோரப்பட்டு விவசாயிகளால் பெறப்பட்ட மொத்த காப்பீட்டுப் பணத்தின் மதிப்பு ரூ.28,564 கோடியாகும்.

புதிய காப்பீட்டுத் திட்டம் யாருக்குப் பயனளித்தது?

மோடி அரசு கொண்டுவந்த பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா திட்டத்தில் முந்தைய காப்பீட்டுத் திட்டத்தைக் காட்டிலும் ரூ.36,848 கோடி பிரீமியம் கூடுதலாக வசூலிக்கப்பட்டுள்ளது. இது 348 விழுக்காடு கூடுதலாகும். ஆனால், இணைக்கப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கையோ மிகக் குறைவாகும்.

2015-16ஆம் ஆண்டில் புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு பழைய காப்பீட்டுத் திட்டத்தில் 48.55 மில்லியன் விவசாயிகள் இணைந்திருந்தனர். புதிய திட்டம் அறிவிக்கப்பட்டு இரண்டாண்டுகளில் 2 லட்சம் பேர் மட்டுமே கூடுதலாக இணைந்துள்ளனர். இது வெறும் 0.42 விழுக்காடு மட்டுமே வளர்ச்சியாகும்.

2016-17ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஆண்டில் இதில் இணைந்த விவசாயிகளின் எண்ணிக்கை 57 மில்லியனாக அதிகரித்தது. ஆனால், 2017-18ஆம் நிதியாண்டில் 48 மில்லியனாகக் குறைந்துவிட்டது. ஒரே ஆண்டில் பயிர்க் காப்பீட்டில் இணைந்த விவசாயிகளின் எண்ணிக்கை 14 விழுக்காடு சரிந்துவிட்டது. தொடக்கத்தில் இத்திட்டத்தின் பயன்களை எதிர்பார்த்து இணைந்த விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகவில்லை. இதில் இணைந்த விவசாயிகள் பயிர்க் கடன் பெறுவதற்கும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால்தான் விவசாயிகள் இதிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு ஒட்டுமொத்த பயிர்க் காப்பீட்டுப் பரப்பு 46.39 மில்லியன் ஹெக்டேரிலிருந்து 49.04 மில்லியன் ஹெக்டேராக உயர்ந்துள்ளது. ஆனால், விவசாயிகளின் எண்ணிக்கை உயர்வோடு ஒப்பிடுகையில் வேளாண் பரப்பு உயர்வு என்பது மிகவும் குறைவே. 2018-19ஆம் நிதியாண்டுக்குள் 100 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவை பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா திட்டத்தில் இணைக்க மோடி அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கில் சரிபாதி பரப்புதான் தற்போது இணைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் ராஜ்ய சபாவில் பதிலளித்துப் பேசுகையில், “2017-18ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வேளாண் கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டது. அதேபோல ஆதார் கட்டாயமாக்கப்பட்டது போன்ற நடவடிக்கைகளால் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது” என்றார்.

பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளின் எண்ணிக்கையும், சாகுபடி பரப்பும் குறைந்தபோதும் கூட காப்பீட்டு நிறுவனங்களின் வசூல் குறையவில்லை. உண்மையில் காப்பீட்டு வசூல்தான் உயர்ந்துள்ளது. 2016-17ஆம் ஆண்டில் மொத்த பிரீமியம் வசூல் ரூ.22,362 கோடியாக இருந்தது. இது 2017-18ஆம் ஆண்டில் ரூ.25,046 கோடியாக அதிகரித்துள்ளது. 2017-18ஆம் ஆண்டில் ஒரு விவசாயி செலுத்திய பிரீமியம் தொகையின் மதிப்பு தோராயமாக 31 விழுக்காடு உயர்ந்து 5,135 ரூபாயாக அதிகரித்துள்ளது.

ஆராய்ச்சி மற்றும் சர்வதேச பொருளாதார விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலின் ஆலோசனைக் குழுவில் மூத்த உறுப்பினரும், முன்னாள் வேளாண் செயலாளருமான சிராஜ் ஹுசைன் கூறுகையில், “பிரீமியம் மதிப்பு எவ்வாறு உயர்ந்தது என்பதை அறிய, எங்கு பிழை நடந்தது என்பதை அறிய மாநில வாரியான விரிவான ஆய்வு நடத்த வேண்டியுள்ளது” என்றார்.

உரிமம் கோரியவர்களுக்கு வழங்கப்பட்ட பணத்தின் மதிப்பு சற்று உயர்ந்துள்ளது. ஆனால், பணத்தை வழங்கும் காலம் மிகவும் தாமதப்படுத்தப்பட்டுள்ளது என்ற புகாரும் முக்கியமாக முன்வைக்கப்படுகிறது.

கடந்த இரண்டாண்டுகளில் உரிமம் கோரியவர்களுக்கு வழங்கப்பட்ட பணத்தின் மதிப்பு சற்று உயர்ந்துள்ளது. ஆனால், பிரீமியம் மதிப்போ 4.5 மடங்கு அதிகரித்துள்ளது. பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா அறிமுகப்படுத்தப்பட்டதற்கு முந்தைய இரண்டாண்டுகளில் ரூ.28,564 கோடி உரிமம் கோரியவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதற்குப் பிந்தைய அக்டோபர் 10ஆம் தேதி வரையிலான கடந்த இரண்டாண்டுகளில் உரிமம் கோரியவர்களுக்கு வழங்கப்பட்ட பணத்தின் மதிப்பு 10 விழுக்காடு மட்டுமே அதிகரித்து ரூ.31,613 கோடியாக உள்ளது.

எனவே, இன்றைய நாள் வரையில் ரூ.15,795 கோடி காப்பீட்டு நிறுவனங்களின் கைகளில் உபரியாக உள்ளது. மொத்த பிரீமியம் வசூலில் மூன்றில் ஒருபங்கு காப்பீட்டு நிறுவனங்களிடம் விஞ்சி நிற்கிறது. வேளாண் அமைச்சக அறிக்கையின்படி வெளிப்படும் முக்கியக் குறிப்பு என்னவென்றால் 2017-18ஆம் ஆண்டின் ரபி பருவத்தில் உரிமம் கோரியவர்களில் பெரும்பாலானவர்களின் கோருதல் இன்னமும் காப்பீடு நிறுவனங்களால் மதிப்பிடப்படவில்லை அல்லது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

வேளாண் அமைச்சகத்தின் அறிக்கையின்படி, 2017-18இல் உரிமம் கோரி பணம் பெற்றவர்களில் 99 விழுக்காட்டினர் காரிஃப் பருவத்துக்கும், ஒரு விழுக்காட்டினர் மட்டுமே ரபி பருவத்துக்கும் காப்பீட்டுத் தொகை பெற்றுள்ளனர். ரபி பருவத்துக்கான அறுவடை மே மாதமே முடிவடைந்துவிட்டது. அறுவடை முடிந்து இரண்டு மாதங்களுக்குள் உரிமம் கோரியவர்களுக்குப் பணம் செலுத்தப்பட்டுவிட வேண்டும் என்பது பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா திட்டத்தின் விதி. பணத்தை வழங்கக் காப்பீட்டு நிறுவனங்கள் காலம் தாழ்த்தினால் 12 விழுக்காடு அபராதம் செலுத்த வேண்டுமென்பதும் அதன் விதிகளுள் ஒன்று.

ஆனாலும், ரபி பருவத்துக்கான உரிமம் கோரியவர்களுக்கு வழங்கப்பட்ட பணம் குறித்த விவரங்கள் வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் அறிக்கையில் அக்டோபர் 10ஆம் தேதி வரையிலும் இல்லை. ரபி பருவத்துக்கான காப்பீட்டு உரிமம் கோரிய விவசாயிகளுக்கு அவர்களுக்கான பணம் உரிய காலத்தில் வழங்கப்படவில்லை என்று தி வயர் ஊடகமும் முன்பே செய்தி வெளியிட்டிருந்தது.

விவசாயிகள் எதையும் உபரியாகச் சேர்த்து வைக்கவில்லை. இதனால் அடுத்த பருவத்துக்கான சாகுபடிக்கு அவர்களிடம் போதிய பணம் இருப்பில் இருப்பதில்லை. எனவே உரிய காலத்தில், அடுத்த சாகுபடிக்கு முன்பாக உரிமம் கோரிய காப்பீட்டுப் பணம் கிடைத்தால் வசதியாக இருக்கும் என்கின்றனர் விவசாயிகள். “ரபி பருவத்தில் ஏற்பட்ட பயிர் இழப்புகளுக்கான காப்பீட்டுப் பணம் காரிஃப் விதைப்புக்கு முன்பாகக் கிடைக்க வேண்டும். இல்லையென்றால் எங்களால் எப்படி விதைப்புப் பணிகளை மேற்கொள்ள முடியும்?” என்கிறார் விகால் பச்சர். இவர் ஹரியானாவைச் சேர்ந்த விவசாயி. இவர் ஐசிஐசிஐ லாம்பார்டு நிறுவனத்திடமிருந்து 2017 காரிஃப் பருவத்துக்கான காப்பீட்டுப் பணத்தைப் பெற இயலாமல் தடுமாறி வருகிறார்.

அதிக லாபமீட்டிய காப்பீட்டு நிறுவனங்கள்

அகமதாபாத்தைச் சேர்ந்த இந்திய மேலாண்மை நிறுவனம் பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா திட்டத்தின் செயல்பாடுகள் பற்றி மதிப்பாய்வு செய்துள்ளது. காப்பீட்டு நிறுவனங்கள் வழக்கமான லாபத்தைக் காட்டிலும் கூடுதலான லாபமீட்டுவதைத் தடுக்க நிதி மேலாண்மையை இத்திட்டத்தில் வகுக்க வேண்டியது அவசியம் என்று அந்த மதிப்பாய்வில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையானது ஒன்றிய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் 2017-18ஆம் ஆண்டில் மட்டும் 21 நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்பதும், இதில் பல நிறுவனங்களுக்குப் போதிய அனுபவம் இல்லை என்பதும், போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பதும், சிறந்த சேவைகள் வழங்கும் திறன் இல்லையென்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட காப்பீட்டு நிறுவனங்களின் எண்ணிக்கையை 10 ஆகக் குறைத்து, ஒழுங்குபடுத்தப்பட்டால் மட்டுமே சிறந்த கண்காணிப்பு மற்றும் நிர்வாக வசதிகளை அளிக்க இயலும் என்றும் அந்த மதிப்பாய்வில் கூறப்பட்டுள்ளது.

நன்றி: தி வயர்

தமிழில்: ர.பிரகாசு

நேற்றைய கட்டுரை: சிறு நகர வாடிக்கையாளர்கள் சளைத்தவர்களா?

மின்னஞ்சல் முகவரி: [email protected]

வெள்ளி, 7 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon