மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 3 ஜுன் 2020

மிளகு இறக்குமதியைக் குறைக்கக் கோரிக்கை!

மிளகு இறக்குமதியைக் குறைக்கக் கோரிக்கை!

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மிளகுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டுமென்று உற்பத்தியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மிளகின் அளவு இருமடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. அக்டோபர் மாதத்தில் மிளகு இறக்குமதி 1,500 டன்னாக அதிகரித்துள்ளது. இது செப்டம்பர் மாதத்தில் 1,000 டன்னாக மட்டுமே இருந்தது. இறக்குமதி அளவானது விரைவில் 2,500 டன்னாக அதிகரிக்குமென்றும் உற்பத்தியாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து இந்திய மிளகு மற்றும் மசாலா வர்த்தகர்கள், உற்பத்தியாளர்கள், தோட்டக்காரர்கள் கூட்டமைப்பின் கேரளா பகுதியின் ஒருங்கிணைப்பாளர் கிஷோர் ஷாம்ஜி பிசினஸ் லைன் ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில், “போலியாக மதிப்பு கூட்டப்பட்ட வியட்நாம் மிளகு, இலங்கை வழியாக இந்தியாவுக்குக் கொண்டுவரப்படுகிறது. கிலோ ஒன்றுக்கு ரூ.500 என்ற விலையில் தடையில்லாமல் இந்தியச் சந்தைக்குக் கொண்டுவரப்படும் இந்த மிளகால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் மிளகு நுகர்வு 65,000 டன்னாக உயர்ந்துள்ள நிலையில், உள்நாட்டு உற்பத்தி 50,000 டன்னாகக் குறைந்துள்ளது. இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தியே இலங்கை ஏற்றுமதியாளர்கள் இந்தியாவுக்குள் வியட்நாம் மிளகை இறக்குமதி செய்து வருகின்றனர். அந்நியச் செலாவணி மேலாண்மை சட்டத்தைப் பல ஏற்றுமதியாளர்கள் மீறி வருகின்றனர்” என்று கூறியுள்ளார்.

அதேபோல, கர்நாடக கறுப்பு மிளகு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கே.கே.விஸ்வநாத் இதுகுறித்துக் கூறுகையில், “கடந்த 18 மாதங்களில் இறக்குமதி செய்யப்பட்ட மிளகினால், உள்நாட்டு மிளகின் விலை கிலோ ஒன்றுக்கு 720 ரூபாயிலிருந்து 350 ரூபாயாகச் சரிந்துள்ளது. இந்திய-இலங்கை இலவச வர்த்தக ஒப்பந்தத்தின்படி 2,500 டன் மிளகு வரியில்லாமல் இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அதற்கு மேல் இறக்குமதி செய்யப்படும் 2,500 டன் மிளகுக்குக் குறைந்தபட்ச வரி விதிப்பாக 8 விழுக்காடு மட்டுமே வரி விதிக்கப்படுகிறது” என்றார்.

புதன், 5 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon