மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 17 நவ 2019

கஜா பாதிப்பு: மின் கட்டண அவகாசம் நீட்டிப்பு!

கஜா பாதிப்பு: மின் கட்டண அவகாசம் நீட்டிப்பு!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளில் மின்சாரக் கட்டணம் கட்டுவதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 16ஆம் தேதியன்று நாகப்பட்டினம் – வேதாரண்யம் இடையே கரையைக் கடந்தது கஜா புயல். நள்ளிரவு முதல் காலை வரை வீசிய காற்றினாலும், தொடர் மழையாலும் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகள் பாதிப்புக்கு உள்ளாகின. இதனால் மின்கம்பங்கள், மின்மாற்றிகள் உருக்குலைந்து, அங்கு மின் விநியோகம் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டது. அவற்றைச் சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து இரண்டு வார காலத்துக்கும் மேலாக நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, நவம்பர் 30ஆம் தேதி வரை கஜா பாதிப்புக்கு உள்ளான 8 மாவட்டங்களில் மின்சாரக் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன்பின், அபராதம் இன்றிச் செலுத்துவதற்கான கால அவகாசம் டிசம்பர் 5ஆம் தேதியாக நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று (டிசம்பர் 6) மூன்றாவது முறையாக இந்த கால அவகாசத்தை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது மின்சார வாரியம்.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள 14 பிரிவுகள், திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி, திருவாரூர் கோட்டங்கள், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து கோட்டங்களைச் சார்ந்த மின் நுகர்வோர்கள் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் டிசம்பர் 26ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் புதுக்கோட்டை, ஓரத்தநாடு கோட்டங்களில் மின் கட்டணத்துக்கான அவகாசம் டிசம்பர் 31ஆம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், தாழ்வழுத்த மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு மட்டுமே இந்த கால அவகாசம் பொருந்தும் என்றும் அறிவித்துள்ளது தமிழ்நாடு மின்சார வாரியம்.

வியாழன், 6 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon