மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 3 ஜுன் 2020

ரேவந்த் ரெட்டி கைது: எஸ்பி இடமாற்றம்!

ரேவந்த் ரெட்டி கைது: எஸ்பி இடமாற்றம்!

தெலங்கானா காங்கிரஸ் தலைவரை கைது செய்த காவல் துறை கண்காணிப்பாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தெலங்கானா மாநில சட்டமன்றத் தேர்தல் நாளை (டிசம்பர் 7 ) நடைபெறவுள்ளது. இதற்காக மாநிலத்தில் அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டன. பிரச்சாரம் நேற்று (டிசம்பர் 5 ) மாலையுடன் நிறைவடைந்தது. இதற்கிடையே தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி தலைவரும், காபந்து முதல்வருமான சந்திரசேகர் ராவ் சூறாவளி பயணம் மேற்கொண்டார். நேற்று முன்தினம் (டிசம்பர் 4) மாலை கோதண்கல் தொகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாடினார்.

இதே தொகுதியில் அம்மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி போட்டியிடவுள்ளார். முன்னதாக, கோதண்கலில் சந்திரசேகர் ராவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அவர் அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பையொட்டி, நேற்று (டிசம்பர் 5) அதிகாலை 3 மணியளவில் அவரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக சட்ட ஒழுங்கு கூடுதல் ஏடிஜிபி ஜித்தேந்தர், சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரேவந்த் ரெட்டியை கைது செய்ததாகத் தெரிவித்தார்.

இந்த நிலையில், ரேவந்த் ரெட்டியை அவரது வீட்டுக்குள் நுழைந்து அதிரடியாக கைது செய்த விகராபாத் மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் டி.அன்னபூர்ணாவைக் காவல் துறை தலைமையகத்துக்கு மாற்றும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. மேலும், அன்னபூர்ணாவுக்குத் தேர்தல் பணி எதுவும் வழங்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் கண்டிப்பாகக் கூறியுள்ளது. ரேவந்த் ரெட்டியை கைது செய்திருக்க வேண்டியதில்லை எனவும் கருத்து தெரிவித்துள்ளது

அன்னபூர்ணாவுக்குப் பதிலாக அவினாஷ் மொகந்தி என்பவர் விகராபாத் மாவட்டத்துக்கு புதிய காவல்துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரி ரஜத் குமார் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதன், 5 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon