மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

நிகழ் களம்: திடீர் போராட்டத்தில் ஸ்விக்கி பாய்ஸ்!

நிகழ் களம்: திடீர் போராட்டத்தில் ஸ்விக்கி பாய்ஸ்!

ஸ்விக்கி ஆர்டர்களை டெலிவரி செய்யும் ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரிச் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் உணவு டெலிவரி செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.

ஹோட்டலுக்குச் சென்று உணவு உண்ணும் காலம் மாறி, தற்போது பிடித்த உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்து வீட்டுக்கோ, அலுவலகத்துக்கோ உணவு வகைகளை வரவழைத்துச் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதற்கு வசதியாக ஸ்விக்கி, ஜொமாட்டொ, ஊபர் ஈட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் மொபைல் செயலிகளை உருவாக்கி உணவை டெலிவரி செய்துவருகின்றன.

இந்தப் பணியில் முன்னணியில் இருப்பது ஸ்விக்கி ஆப். டெலிவரி பாய் வண்டியை எடுத்துக்கொண்டு, ஆர்டர் கொடுத்தவர்களின் இடத்தை நோக்கி எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறார் என்பது உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் ஸ்விக்கி மூலம் தெரிந்துகொள்ளலாம். இந்தியாவில் 45,000 உணவகங்களுடன் இணைந்து மொத்தம் 45 நகரங்களில் செயல்படும் ஸ்விக்கியில், தற்போது டெலிவரி செய்யும் பணிகளில் மட்டும் 1 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். இதில் இளைஞர்களே அதிகம். கூடுதல் வருமானத்துக்காக பார்ட் டைம் வேலை செய்யும் ஆண்களும் அதிகம். வெயில், மழை, இரவு, பகல் பாராமல் இவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் உணவை டெலிவரி செய்துவருகின்றனர்.

நினைத்த நேரத்தில் உணவைக் கொண்டு வந்து கொடுப்பதில் ஸ்விக்கி பெயர் பெற்றுள்ள நிலையில், உணவை டெலிவரி செய்யும் ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரிச் சென்னையில் பல இடங்களில் கடந்த இரண்டு நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பணிகளுக்குச் செல்லாமல், அடையாறு, வடபழனி, ராயப்பேட்டை, மயிலாப்பூர், ஓஎம்ஆர், போரூர் போன்ற முக்கிய பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊதிய உயர்வு வழங்க வேண்டும், ஊக்கத் தொகையை மாற்றி அமைக்க வேண்டும், இரவு நேரங்களில் போலீஸ் கெடுபிடிகள் குறித்து ஸ்விக்கி நிர்வாகம் போலீசாருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 5 கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஸ்விக்கி ஆப்பில் குறிப்பிட்ட லொக்கேஷன் நேற்று முதல் இன்று மாலை 4 மணிவரை தடை செய்யப்பட்டிருந்தன. இதனால் உணவு ஆர்டர் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. ”மதிய உணவு வேளையில் அதிகளவு ஆர்டர் வரும். ஆனால் கடந்த இரு நாட்களாக ஸ்விக்கி மூலம் வரும் ஆர்டர்கள் பெருமளவு குறைந்துவிட்டன” என்று உணவக முதலாளி ஒருவர் தெரிவிக்கிறார். நாம் விசாரித்த வரையில் பல உணவகங்களிலும் இதே நிலைதான்

இது குறித்து ஸ்விக்கி ஊழியர் பிரபாகரன் மின்னம்பலத்திடம் கூறியதாவது: ”4 கிலோ மீட்டர் வரை ஒரு ஆர்டருக்கு ரூ.40 வழங்கி வந்தனர். அதனை முதலில் 36 ரூபாயாகக் குறைத்தனர். அதையும் 35 ரூபாயாகக் குறைத்தனர். திங்கள் முதல் வெள்ளி வரை 85 ஆர்டர்கள் முடித்திருந்தால் அதற்கு ரூ.1000ம் ஊக்கத் தொகை வழங்கி வந்தனர். அதையும் தற்போது குறைத்துவிட்டனர். எனவே இந்தத் தொகையை குறைக்காமல் ஊதியம் வழங்க வலியுறுத்தி ஸ்விக்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்” என்று தெரிவித்தார்.

”நாங்கள் இருக்கும் இடத்திலிருந்து இரண்டு அல்லது மூன்று கிலோ மீட்டர் வரை பயணித்து, ஹோட்டலுக்குச் சென்று ஆர்டர் வாங்கிக்கொண்டு அங்கிருந்து 6, 7கிலோ மீட்டர் சென்று டெலிவரி செய்யும் நிலை உள்ளது. அப்படிப் பார்த்தால் அவர்கள் கொடுக்கிற ரூ.35 பெட்ரோலுக்கு மட்டும்தான் உதவுகிறது. இதில் எங்கிருந்து தனிப்பட்ட செலவுகளைப் பார்ப்பது” என்று வேதனை தெரிவித்தார். எனவே ஊதிய உயர்வு கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

மற்றொரு ஊழியரிடம் பேசியபோது, “கோரிக்கைகளை வலியுறுத்தி எங்களது உயரதிகாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம் , அவர்கள் நிர்வாகத்திடம் ஆலோசித்த பிறகு கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறினார்கள்” எனத் தெரிவித்தார். தற்போது சிறிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்துக்கு நிர்வாகம் செவிசாய்க்கவில்லை எனில், அனைத்து ஊழியர்களும் இணைந்து சென்னையில் மிகப்பெரும் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

- கவி

வியாழன், 6 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon