மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 25 செப் 2020

7,000 அமெரிக்கர்களுக்கு வேலை!

7,000 அமெரிக்கர்களுக்கு வேலை!

இந்தியாவின் இன்ஃபோசிஸ் நிறுவனம் அமெரிக்காவில் புதிய தொழில்நுட்ப மையத்தைத் தொடங்கியுள்ளது. இதுவரையில் 7,000 அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ், அமெரிக்காவில் தகவல் தொடர்பு, சில்லறை விற்பனை மற்றும் வங்கிப் பிரிவுகளில் அதிகக் கவனம் செலுத்தத் திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் புதிய தொழில்நுட்ப மையம் ஒன்றைத் திறந்து அதன் வாயிலாக 2020ஆம் ஆண்டுக்குள் அப்பகுதியைச் சேர்ந்த 500 அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாகவும் இன்ஃபோசிஸ் சமீபத்தில் உறுதியளித்திருந்தது. இந்நிலையில் அமெரிக்காவின் ஹார்ட்ஃபோர்டில் புதிய தொழில்நுட்ப மையம் ஒன்றைத் இன்ஃபோசிஸ் திறந்துள்ளது. கடந்த 18 மாதங்களில் மட்டும் 7,000 அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளதாகவும் இந்நிறுவனம் கூறியுள்ளது.

இதுகுறித்து இன்ஃபோசிஸ் நிறுவனம் பங்குச் சந்தையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’ஹார்ட்ஃபோர்டு தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு மையம் வாயிலாக அமெரிக்காவின் நிறுவனங்களின் தொழில் வளர்ச்சிக்கு எங்களால் உதவ முடியும். இந்தப் புதிய மையத்துடன் அமெரிக்காவில் உள்ள இதர ஐந்து மையங்கள் வாயிலாக தற்போதைய தொழில் தேவைகளையும் டிஜிட்டல் தீர்வுகளையும் பூர்த்தி செய்ய இயலும்’ என்று கூறப்பட்டுள்ளது. சென்ற ஆண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனம், நான்கு தொழில்நுட்ப மையங்கள் அமெரிக்காவில் அமைக்கப்படும் எனவும், அதன் வாயிலாக 10,000 அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனவும் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

வியாழன், 6 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon