மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 10 ஆக 2020

சிறப்புக் கட்டுரை: சிறு நகர வாடிக்கையாளர்கள் சளைத்தவர்களா?

சிறப்புக் கட்டுரை: சிறு நகர வாடிக்கையாளர்கள் சளைத்தவர்களா?

சுச்சி பன்சால்

அமேசான் நிறுவனத்தின் பண்டிகைக் கால விற்பனை அக்டோபர் 10 முதல் 15 வரை நடைபெற்றது. இந்த விற்பனையின்போது 80 விழுக்காடு வாடிக்கையாளர்கள் சிறு நகரங்களிலிருந்தே பொருட்களை வாங்கியுள்ளதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. பெரிய வீட்டு உபயோகப் பொருட்கள் அபரிமிதமாக விற்பனையாகியுள்ளன. அவற்றில் 50 விழுக்காட்டுக்கும் மேல் இரண்டாம் அடுக்கு மற்றும் அதற்கும் கீழான நகரங்களிலிருந்து வந்துள்ளன.

ஆடை மற்றும் ஃபேஷன் பொருட்களிலும்கூட 63 விழுக்காடு ஆர்டர்கள் இரண்டாம் அடுக்கு மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களிலிருந்து வந்துள்ளன. மேற்கு வங்கத்தின் மல்தா, ஒடிசாவின் அங்குல், அந்தமானின் ஹெவ்லாக், உத்தரப் பிரதேசத்தின் ஹப்பூர், அசாமின் தின்சுகியா, ஜார்கண்டின் தும்கா போன்ற இடங்களுக்கும் கூட அமேசான் பொருட்களை விநியோகித்துள்ளது.

இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு சிறு நகரங்களில் உள்ள மில்லெனியல் (22 முதல் 37 வயதுக்குட்பட்டவர்கள்) வாடிக்கையாளர்களோ முதல் அடுக்கு பெருநகரங்களின் வாடிக்கையாளர்களைப் போலவே ஆன்லைன் ஷாப்பிங்கில் நடந்துகொள்கின்றனர். அமேசான் இந்தியா நிறுவனத்தின் வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் சந்தைப்படுத்துதல் இயக்குநரான கிஷோர் தோட்டா பேசுகையில், அமேசான் நிறுவனத்தின் வாடிக்கையாளர் பட்டாளத்தில் 25 முதல் 35 வயது நிரம்பியவர்களே ஏராளம் என்று கூறுகிறார்.

மெட்ரோ நகரங்களில் இருக்கும் மில்லெனியல்களைப் போலவே இரண்டாம் அடுக்கு நகரங்களிலிருக்கும் மில்லெனியல்களும் பொருட்களை வாங்க விரும்புவதாக அவர் கூறுகிறார். “இந்தியாவின் தொலைதூரப் பகுதியிலும்கூட நாங்கள் ஆப்பிள் ஐபோன்களை விற்பனை செய்கிறோம். விலையுயர்ந்த அழகுசாதனப் பொருட்களை இரண்டாம் அடுக்கு மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களிலும் விற்பனை செய்கிறோம். இதுபோல மேல் அடுக்கு கீழ் அடுக்கு வாடிக்கையாளர்களை ஒப்பிடும்போது பொருளின் விலை அவர்களுக்கு ஒரு பிரச்சினையல்ல என்பது விளங்குகிறது. அவர்களின் நுகர்வு அனைத்துமே ஒரே மாதிரியாகத்தான் உள்ளது” என்று கூறினார். அமெரிக்காவின் விளையாட்டு ஆடைகள் பிராண்டான அண்டர் ஆர்மர் பொருட்களை அவர் எடுத்துக்காட்டாகக் கூறுகிறார். இந்த பிராண்டின் பொருட்கள் பிரத்யேகமாக அமேசான் நிறுவனத்தில் மட்டும்தான் விற்பனை செய்யப்படுகிறது. விலையுயர்ந்த இந்நிறுவனத்தின் பொருட்கள் மெட்ரோ நகரங்களில் மட்டுமல்லாமல் சிறு நகரங்களிலும் சிறப்பாக விற்பனையாகியுள்ளதாக கிஷோர் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் ஷாப்பிங்கில் மட்டும் பெருநகர மற்றும் சிறு நகர மில்லெனியல்களிடையேயான ஒற்றுமைகள் முடிந்துவிடுவதில்லை. இரண்டாம் அடுக்கு நகரங்களின் மில்லெனியல்கள் வெளியில் உணவு அருந்துவதற்கு விரும்புகின்றனர். மெட்ரோ நகரங்களிலிருந்தும் ஹோட்டல் பிராண்டுகள் சிறு நகரங்களிலிருந்தால் அவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். பெருநகரங்களைச் சேர்ந்த உணவக பிராண்டுகள் தங்களின் கிளைகளை இரண்டாம் அடுக்கு நகரங்களில் தொடங்கி வருகின்றன. சண்டிகரில் ஃபார்சி கஃபே, லக்னோவில் ஃப்லையிங் சாசர் கஃபே, ராய்ப்பூரில் மோச்சா, ராஞ்சியில் ஹிப்பொபோலா போன்றவை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். இருபதுகளில் உள்ள இளைஞர்கள் இதுபோன்ற பிரபல உணவகங்களுக்கு அடிக்கடி வந்துசெல்கின்றனர். இந்நிறுவனங்களின் ஊடுருவலுக்கு சில காரணங்களும் உள்ளன. சமூக ஊடகங்களின் வாயிலாகப் பிரபல உணவக பிராண்டுகள் குறித்து சிறு நகரங்களைச் சேர்ந்த நுகர்வோர் அறிந்துகொள்கின்றனர். இவ்வழியில் உணவு டிரெண்டுகள் இரண்டாம் அடுக்கு நகரங்களையும் விரைவில் எட்டிவிடுகின்றன.

மெட்ரோ நகரங்களைச் சேர்ந்த மில்லெனியல்களின் வாழ்க்கை முறையைப் போலவே மெட்ரோ அல்லாத நகரங்களைச் சேர்ந்த மில்லெனியல்களின் வாழ்க்கை முறை மாறிவிட்டது. ஃபைர்சைட் வெஞ்சர்ஸ் நிறுவனத்தின் பங்குதாரரான கண்ணன் சீத்தாராம் பல நுகர்பொருள் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். மெட்ரோ நகர மில்லெனியல்களுக்கும், மெட்ரோ சாராத மில்லெனியல்களுக்கும் இடையே ஏராளமான ஒற்றுமைகள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இருதரப்பினருமே தொழில்நுட்பம் குறித்து அறிந்தவர்களாக உள்ளனர்.

திரைப்படங்கள், இசை, விளையாட்டு போன்ற நிகழ்ச்சிகளைக் காண்பதற்கு ஸ்மார்ட்போன்கள் வழிவகை செய்கின்றன. அமேசான், ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட மின்னணு வர்த்தக நிறுவனங்களால் ஷாப்பிங் வாய்ப்புகளும் ஏராளம். “ஆதலால் இரண்டாம் அடுக்கு நகரங்களைச் சேர்ந்தவர்கள் பொருட்களை வாங்குவதற்குப் பெரு நகரங்களுக்குச் செல்லத் தேவையில்லை. வேலைவாய்ப்புகள், அழகான தோற்றம், டிரெண்டுகளோடு இருப்பது என இருதரப்பினரின் விருப்பமுமே ஒரே மாதிரியாக இருக்கிறது” என்று அவர் கூறினார்.

மெட்ரோ நகரங்களின் நுகர்வோரைப் போலவே இரண்டாம் அடுக்கு மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களிலும் டிஜிட்டல் தளங்களில் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கின்றனர். பிக்ஸ்சைஸ்ட்ஸ் என்ற ஊடக ஆய்வு நிறுவனத்தின் தகவலின்படி, முதலாம் அடுக்கு நகரங்களிலும், இரண்டாம் அடுக்கு நகரங்களிலும் டிஜிட்டல் பொழுதுபோக்குப் பயன்பாடு ஒரே மாதிரியான வளர்ச்சியைக் கொண்டுள்ளது. தொலைக்காட்சியை விட ஸ்மார்ட்போன்களில் அதிக பொழுதுபோக்கு கிடைப்பதாகப் பெருநகரங்கள் மற்றும் சிறு நகரங்களைச் சேர்ந்த மில்லெனியல்கள் கூறுகின்றனர். பெற்றோருடன் இணைந்து டிவியில் பார்க்க முடியாத நிகழ்ச்சிகளை ஸ்மார்ட்போன்களில் பார்க்க முடிகிறது. ஸ்மார்ட்போன்களால் மில்லெனியல்களுக்கு பொழுதுபோக்குச் சுதந்திரம் கிடைக்கிறது. இவ்வகை நுகர்வோர் டிஜிட்டல் பொழுதுபோக்குக்கு ஆதரவாக டிவிகளைத் தவிர்த்து ஒதுக்கிவிடுகின்றனர்.

இப்ஸாஸ் ஆய்வு நிறுவனத்தின் தலைமை இயக்குநரான அஷ்வினி சிர்சிகார் பேசுகையில், முதல் அடுக்கு மற்றும் இரண்டாம் அடுக்கு நகரங்களைச் சேர்ந்தவர்கள் டிஜிட்டல் தளங்களை அதிகம் விரும்புவதாகவும், சமூக ஊடகங்களில் இன்ஸ்டகிராமை அதிகம் விரும்புவதாகவும் கூறுகிறார். ஃபேஸ்புக் இப்போது காலம் கடந்துவிட்டதாகவும், பழைய தலைமுறையினருக்கான சமூக ஊடகம் எனவும் மில்லெனியல்கள் கருதுகின்றனர்.

உணவுத் துறையிலும் மில்லெனியல்கள் ஒரு கை பார்த்துவிட்டனர். உணவு டெலிவரி ஸ்டார்ட் அப் நிறுவனங்களான ஜொமாட்டோ, ஸ்விகி போன்றவை உணவுகளை ஆர்டர் செய்வதை எளிமையாகவும், விலை குறைவாகவும் இத்தலைமுறையினருக்கு மாற்றியுள்ளன. எனினும், பெரிய பிராண்டுகள், புதிய டிரெண்டுகள் பெரு நகரங்களிலேயே அதிகம் உள்ளன. இதில் சிறு நகர மில்லெனியல்கள் சற்று பின்தங்கியிருந்தாலும் விரைவில் களத்தைப் பிடித்துவிடுவர். அஷ்வினி பேசுகையில், “சிறு நகரங்களில் உள்ள மில்லெனியல்கள் மிகவும் பொறுப்பானவர்களாகவும், இலக்குகளைக் கொண்டவர்களாகவும், குடும்பக் கடமைகள் குறித்து கவனத்துடனும், உணர்வுடனும் இருப்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். இந்தக்கால தலைமுறையினர் தங்களைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பதாகவும், பொறுப்பற்றவர்களாகவும் இருப்பதாகக் கூறப்படும் போலியான கட்டுக் கதைகளை அவர்கள் உடைத்துள்ளனர்” என்று கூறினார்.

நன்றி: மின்ட்

தமிழில்: அ.விக்னேஷ்

நேற்றைய கட்டுரை: ஸ்டெர்லைட் ஆலையின் தடை நியாயமற்றதா?

புதன், 5 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon