மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

விமானங்களில் வைஃபை: புத்தாண்டில் தொடக்கம்!

விமானங்களில் வைஃபை: புத்தாண்டில் தொடக்கம்!

அடுத்த மாதம் முதல் விமானங்களில் இணையப் பயன்பாடு மற்றும் அழைப்பு வசதி அமலுக்கு வந்துவிடும் என்று மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானப் பயணங்களின் போது மொபைல் சேவையை இந்தியாவில் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. உலகின் பல்வேறு நாடுகளில் விமானப் பயணத்தின் போது மொபைல் சேவைகளைப் பயன்படுத்துவதற்கான அனுமதி உள்ளது. ஆனால் அந்த விமானங்கள் இந்திய வெளியைக் கடக்கும் போது மொபைல் சேவைகளை நிறுத்தியாக வேண்டும். விமானங்களில் இச்சேவையைப் பயன்படுத்துவதற்கான ஒப்புதலைத் தொலைத் தொடர்பு ஆணையம் மே மாதத் தொடக்கத்தில் வழங்கிய நிலையில், இத்திட்டத்திற்கான கொள்கை உருவாக்கத்தில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மற்றும் விமானச் சேவை நிறுவனங்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது.

இந்நிலையில், விமானங்களில் இணையம் மற்றும் அழைப்புச் சேவைகளைப் பயன்படுத்தும் வசதி அடுத்த மாதத்தில் அமலுக்கு வரும் என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சரான மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார். டிசம்பர் 5ஆம் தேதி டெல்லியில் செய்தியாளர்களிடையே பேசிய அவர், சட்ட அமைச்சகம் இதற்கான ஒப்புதலை வழங்கியவுடன் அடுத்த மாதத்தில் இச்சேவை அமலுக்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். அரசின் இந்தத் திட்டத்தை விஸ்தாரா, ஏர் இந்தியா உள்ளிட்ட விமான நிறுவனங்கள் வரவேற்றுள்ளன. விமானங்களில் வைஃபை வசதியை வழங்குவதற்கான உரிமங்கள் பெறுவதைத் தனி வகையாகப் பிரிக்கவும் மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. விமானங்களில் இணையச் சேவை வழங்கும் திட்டத்தில் இணைய ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் - ஐடியா நிறுவனங்களும் தயாராக உள்ளன.

வியாழன், 6 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon