மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 21 அக் 2020

கிருஷ்ணகிரி: விவசாயிகளுக்கு மண் நல அட்டை!

கிருஷ்ணகிரி: விவசாயிகளுக்கு மண் நல அட்டை!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 2.43 லட்சம் விவசாயிகளுக்கு மண் நல அட்டை வழங்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 5ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அம்மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தலைமையில் மண்வள விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 80 விவசாயிகளுக்குப் புதிதாக மண்வள அட்டை வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி தார் பாலின், விசைத் தெளிப்பான், நீர் கடத்தும் குழாய்கள் போன்றவற்றை வழங்குவதற்கான ஆணையையும் மாவட்ட ஆட்சியர் பிரபாகர் வழங்கியுள்ளார். பயன் திட்டங்களை வழங்கிப் பிரபாகர் பேசுகையில், சத்தான உணவு உற்பத்திக்கு வளமான மண் மிகவும் அவசியமானது என்றார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசுகையில், “மனித குலத்தின் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் நோக்கத்தோடு டிசம்பர் 5ஆம் தேதியை உலக மண்வள நாளாகக் கொண்டாட ஐக்கிய நாடுகள் சபை விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. மண்ணின் தன்மை பாதிக்காமல் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்ய விவசாயிகள் இந்நாளில் உறுதியேற்க வேண்டும். மண்ணைப் பற்றியும், அதன் தன்மையைப் பற்றியும் அறியாமல் சாகுபடி செய்வதால்தான் மண்வளம் பாதிக்கிறது.

இதனைத் தவிர்க்கவே மத்திய, மாநில அரசுகள் இணைந்து மண்வள அட்டை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துகின்றன. இந்தத் திட்டமானது 2015-16ஆம் ஆண்டுமுதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2,43,115 விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. கட்டிகானப்பள்ளி, பையூர் மற்றும் பெத்தாபம்பட்டி ஆகிய 3 கிராமங்களும் இம்மாவட்டத்தின் முன்னோடி கிராமங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன” என்றார்.

வியாழன், 6 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon