மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 21 அக் 2020

திருமா பற்றி வைகோ: அதிருப்தியில் ஸ்டாலின்

திருமா பற்றி வைகோ: அதிருப்தியில் ஸ்டாலின்

தலித்துகளை திராவிடம் உயர்த்தியதா என்ற தத்துவ விவாதம் வைகோ-திருமாவளவன் ஆகியோர் இடையே ஒரு கசப்பான உரையாடலாக கரை தட்டி நிற்கிறது.

கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து செயல்பட்ட வைகோவிற்கும் திருமாவளவனுக்கும் இடையேதான் இந்த சச்சரவு.

கடந்தவாரம் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நேர்காணல் அளித்தார் வைகோ. அப்போது தலித்துகளை திராவிடம் எந்த நிலையில் வைத்திருக்கிறது என்ற கேள்விக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தபோதே பேட்டி முடியும் தருவாயில் தானாகவே அந்த பேட்டியை முடித்துக் கொண்டு எழுந்தார் வைகோ.

இதுபற்றி விடுதலைச் சிறுத்தைகளின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு தனது ஃபேஸ்புக்கில் ஓர் பதிவிட்டார். ‘வைகோ அவர்களின் கோபம் நியாயம்தானா?’ என்று தலைப்பிட்ட வன்னியரசு,

“கடந்த இரு நாட்களாக சரியான தூக்கமில்லை. நான் பெரிதும் நேசிக்க கூடிய தலைவர் அவர். அவர் இப்படி பேசியிருக்கக்கூடாது. என்று மனம் வேதனை கொள்கிறது. அந்த தலைவர் அண்ணன் வைகோ அவர்கள் தான். என்னுடைய தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களை எப்படி மதிக்கிறேனோ அப்படித்தான், திரு.வைகோ அவர்கள் மீதான மதிப்பீடும்.

நான் மட்டுமல்ல சிறுத்தைகளில் பெரும்பான்மையோர் அப்படித்தான். அந்தளவுக்கு அண்ணன் வைகோ அவர்கள் மீது மதிப்பும் மரியாதையும் உண்டு. ஆனால் கடந்த இரு நாட்களுக்கு முன்பு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் அவரது நேர்காணலை பார்த்தேன்.

திராவிட இயக்கம் தலித்துகளுக்கான அதிகாரப்பகிர்வை சரியாக தந்துள்ளதா என்னும் நியாயமான கேள்வியை முன்வைத்தார்கள். அதற்கு மிக சிறப்பாக, பொறுப்பாக நிறைய பதில் அளித்திருக்கலாம். அதற்கான காரணங்கள் நிறைய இருக்கின்றன.

ஆனால், திரு. வைகோ அவர்கள் அதற்கு பதில் அளிக்காமல், “ தலித்துகளுக்கு எதிராக என்னை காட்ட முயற்சி செய்கிறீர்களா? எங்கள் வீட்டில் வேலை பார்க்கிறவர்கள் தலித்துகள் தான்”என்று சொல்லுகிறார்.

இந்த உளவியல் ஒரு ஆதிக்க உளவியலாக பார்க்கிறோம். பண்ணை அடிமை உளவியலாக, நிலப்பிரபுத்துவ உளவியலாகத்தான் பார்க்கிறோம். தலித்துகள் அதிகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பினாலே அதற்கு பதில் சொல்லக்கூட மறுப்பது எந்தவிதமான பார்வை?

எங்கள் வீட்டில் தலித்துகள் வேலை பார்க்கிறார்கள் என்று சொல்லுவதற்கும் அதிகாரப்பகிர்வுக்கும் ஏதாவது ‘சம்மந்தம்’ இருக்கிறதா? பார்ப்பனர்களிடம் இருந்த அதிகாரம், இடை நிலை சாதிகளுக்கு வந்ததை போல தலித்துகளுக்கு வந்ததா? என்ற கேள்வி திரு.கார்த்திகைச்செல்வன் அவர்களிடமிருந்து மட்டுமல்ல, மாற்றத்தை விரும்பும் ஒவ்வொருவரிடத்திலிருந்தும் பீறிடும் கேள்விகள். ஊடகங்கள் மட்டுமல்ல, எல்லோருமே கேள்வி கேட்கத்தான் செய்வார்கள். கோபமோ பதற்றமோ அடைந்தால் சந்தேகம் தான் கூடுதலாக எழும்” என்று அந்தப் பதிவை முடித்திருந்தார் வன்னியரசு.

இது வைகோவை கடுமையான கொந்தளிப்புக்கு ஆளாக்கியது. “திருமாவளவனை 2006 சட்டமன்றத் தேர்தலின் போது என் வீட்டுக்கு அழைத்து 30 லட்சம் கொடுத்தேன், பின் 20 லட்சம் கொடுத்தேன்” என்றெல்லாம் சொல்லியிருக்கிறார் வைகோ.

மேலும், டிசம்பர் 6 ஆம் தேதி சாத்தூரில் நடந்த ஒரு நிகழ்வில் இதுகுறித்துக் கடுமையாகப் பேசிய வைகோ, “திருமாவளவன் இந்த நாட்டில் வளர்ந்து வருகிற நல்ல தலைவர் என்று தமிழ்நாடு முழுதும் சென்று பேசினேனே... வன்னியரசுவோ தலித்துகளை திராவிடம் உயர்த்தவில்லை என்று எழுதியிருக்கிறார். வன்னியரசு, இதை நீங்களாக எழுதவில்லை. இதை எழுத உங்களுக்கு உத்தரவிட்டது யார்? அரசியல் பண்பாடோட வளந்தவன்யா நான். எனக்கு சாதியெல்லாம் தெரியாது. நான் பெரியாரின், அம்பேத்காரின் வாரிசு” என்று பேசி வன்னியரசுவுக்குப் பின்னால் திருமாவளவன் தான் இருக்கிறார் என்று மறைமுகமாக அவரைத் தாக்கினார் வைகோ.

இதற்கு திருமாவளவனும் பதில் சொல்ல இப்பிரச்னை மேலும் பெரிதாகியிருக்கிறது.

“முகநூலில் அண்ணன் வைகோ அவர்கள் பற்றி வன்னியரசு பதிவு செய்த கருத்து கட்சியின் கருத்தல்ல என்பதை நான் வன்னியரசுவிடம் சுட்டிக் காட்டி அதை நீக்கும்படி கேட்டுக்கொண்டேன். அவரும் வருத்தம் தெரிவித்து நீக்கிவிட்டார். வைகோவின் உதவியாளருக்கும் தொலைபேசி செய்து வருத்தம் தெரிவித்தார். அதன் பின் அண்ணன் வைகோ சொல்லியிருக்கிற கருத்து அதோடு தொடர்புடையதாக தெரியவில்லை.

2006 சட்டமன்றத் தேர்தலில் தன் இல்லத்துக்கு என்ன அழைத்தார். உபசரித்தார், உதவி செய்தார். அதற்கு நான் பல முறை நன்றி சொல்லியிருக்கிறேன். ஆனால் வன்னியரசு கருத்துக்கு இது பதிலா? என் மீது கோபமா? வன்னியரசு மீது கோபமா? நான் யாரையும் தூண்டிவிட்டு கருத்து சொல்கிற அற்பப் பிறவி அல்ல திருமாவளவன்” என்று பதில் சொல்லியிருக்கிறார்.

செய்த உதவியை சொல்லிக் காட்டிவிட்டார் வைகோ என்று விடுதலைச் சிறுத்தைகள் கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள். இந்த பிரச்னை கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்று திருமாவளவன் சொன்னபோதும், திமுக தலைவர் ஸ்டாலின் இதனால் வைகோ மீது கடுமையான அதிருப்தியில் இருப்பதாகச் சொல்கிறார்கள் திமுக சீனியர்கள்.

வியாழன், 6 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon