மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

இந்திய அணிக்குள் ஆஸி. பந்து வீச்சாளர்!

இந்திய அணிக்குள் ஆஸி. பந்து வீச்சாளர்!

நான்கு பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ‘ஐந்தாவது பந்து வீச்சாள’ரை இந்திய அணி தந்து உதவியது என கிரிக்கெட் வர்ணனையாளர் மார்க் பட்சர் கிண்டலாகக் குறிப்பிட்டார். யார் அந்த ஐந்தாவது பௌலர்? இந்திய அணி மட்டையாளர்களின் தவறான ஷாட் தேர்வுதான் அந்த ஐந்தாவது பௌலர் என அவர் கிண்டலடித்தார்.

இன்று (டிசம்பர் 6) காலை அடிலெய்ட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று மட்டை வீச்சைத் தேர்வுசெய்த இந்திய அணி, தன் அதிர்ச்சிகரமான தவறுகளால் மிகவும் அபாயமான நிலைக்குச் சென்றது. சத்தேஸ்வர் புஜாராவின் பொறுப்பான ஆட்டம் இந்திய அணியின் தற்கொலைப் பயணத்தைத் தடுத்து நிறுத்தி அணியைச் சற்றே கவுரவமான நிலையில் நிறுத்தியிருக்கிறது.

முதல் ஐந்து மட்டையாளர்களும் – முரளி விஜய், கே.எல்.ராகுல், விராட் கோலி, அஜிங்க்ய ரஹானே, ரோஹித் ஷர்மா – முற்றிலும் தேவையற்ற ஷாட்களை ஆடித் தங்கள் விக்கெட்டைப் பறிகொடுத்தனர். இந்த ஐவரில் யார் ஆடியது ஆக மோசமான ஷாட் என்பது குறித்து பட்டிமன்றமோ வாக்கெடுப்போ நடத்தலாம் என்னும் அளவுக்கு அந்த ஷாட்கள் ஒன்றையொன்று தோற்கடிக்கும் அளவுக்கு மோசமாக இருந்தன.

பொறியில் சிக்கிய எலிகள்

டெஸ்ட் போட்டிகளில் மட்டையாளரைத் தவறான ஷாட் ஆட வைப்பதற்காகப் பல உத்திகளைப் பந்து வீச்சாளர்கள் பயன்படுத்துவார்கள். விஜய்க்குத் தொடர்ந்து குறைந்த அளவுள்ள பந்துகளை வீசிக்கொண்டிருந்த மிட்செல் ஸ்டார்க், அடுத்தபடியாக முழு அளவிலான பந்தை வீசி விஜயை ட்டைவ் ஆடத் தூண்டினார். விஜய் இந்தப் பொறியில் சிக்கினார். பந்து மட்டையின் விளிம்பில் பட்டு விக்கெட் காப்பாளரின் கைகளுக்குச் சென்றது. விஜய் அடித்த ரன் 11.

அதற்குச் சற்று முன்புதான் ராகுல் கிட்டத்தட்ட இதே போன்ற ட்ரைவுக்கு ஆட்டமிழந்திருந்தார். முழு அளவில் ஆஃப் ஸ்டெம்புக்கு மிகவும் தள்ளி வீசப்பட்ட பந்தை அடிக்கப்போனார். எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் மட்டையை வீசிய ராகுல் ஹேசில்வுட்டுக்குத் தன் விக்கெட்டைப் பரிசளித்துவிட்டுத் திரும்பினார். ராகுல் அடித்த ரன் 2.

அடுத்து வந்த கோலியும் ட்ரைவ் மோகத்துக்குப் பலியானார். முழு அளவில் வரும் பந்து ட்ரைவ் அடிப்பதற்கு உகந்ததுதான். ஆனால், நான்கு ஸ்லிப் தடுப்பாளர்களை நிறுத்திவைத்து ட்ரைவ் ஆட அழைக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தவிர, பந்து நிலத்தில் பட்டு உட்புறமாகவோ வெளிப்புறமாகவோ திசை மாறும் சாத்தியம் இருக்கும் நேரத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சர்வ நிச்சயமாக மட்டையின் மையத்தில் பந்தை எதிர்கொள்ள முடியும் என்ற நிலை இருந்தாலொழிய அந்தப் பந்தை ட்ரைவ் ஆட வேண்டிய அவசியம் இல்லை. அதுவும் ஆட்டம் தொடங்கிய சில ஓவர்களுக்குள் தேவையே இல்லை. விஜயும் ராகுலும் செய்த அதே தவறைச் செய்து கோலியும் 3 ரன்களை மட்டுமே அடித்து பெவிலியன் திரும்பினார்.

எதிர் முனையில் மிக கவனமாகவும் நிதானமாகவும் ஆடிக்கொண்டிருந்த சத்தேஸ்வர் புஜாராவுடன் இணைந்த ரஹானே, கவனமாகவே தொடங்கினார். பொறுமையாக ஆடினார். 31 பந்துகள் வரையிலும் தாக்குப்பிடித்த அவர், திடீரெனப் பொறுமை இழந்து தன்னுடைய கவனத்தைச் சிதறவிட்டார். கிட்டத்தட்ட ராகுலைப் போலவே வெளியில் செல்லும் பந்தை ட்ரைவ் செய்ய முயன்று பிடி கொடுத்து 13 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.

சிறிய ஆசுவாசம்

அடுத்தடுத்து வந்த இந்த அதிர்ச்சிகளுக்குப் பிறகு இந்திய அணிக்கு ஆசுவாசம் கிடைத்தது. அது ரோஹித் – புஜாரா வடிவில் வந்தது. இருவரும் நிதானமாகவும் பந்துக்கு ஏற்ற மதிப்பளித்தும் ஆடி அணியின் சரிவைத் தடுத்து நிறுத்தினார்கள். ரோஹித் அவ்வப்போது மிக நேர்த்தியான பவுண்டரிகளையும் அடித்துக்கொண்டிருந்தார். பேட் கம்மின்ஸ் குறைந்த அளவில் வீசிய ஒரு பந்தை புல் ஷாட் அடித்து எல்லைக் கோட்டுக்கு வெளியே அனுப்பினார். ஸ்டார்க் பந்தில் கவர் திசையில் அபாரமான ஒரு சிக்சரையும் அடித்தார். நேதன் லியோனின் பந்திலும் ஒரு சிக்சர் அடித்தார். அவசரமாக ரன் குவிக்க வேண்டிய அவசியம் இல்லாதபோதும் ரோஹித் தன் இயல்பான ஆட்டத்தை ஆடினார். எந்த ஷாட்டும் தவறான ஷாட் அல்ல.

இப்படி உறுதியாகச் சென்றுகொண்டிருந்தபோதுதான் ரோஹித் தன்னுடைய சக மட்டையாளர்களைப் போலவே ஒரு காரியம் செய்தார். லியோன் பந்தில் சிக்சர் அடித்த அவர் அடுத்த பந்தையும் தூக்கி அடிக்க முடிவுசெய்து ஏறி வந்தார். அவர் முன்னேறி வருவதைக் கவனித்த லியோன், பந்தின் அளவைக் குறைத்து வீச, ரோஹித்தின் ஷாட் கேட்சாக மாறியது. நன்றாக நிலைபெற்றிருந்த ரோஹித் தேவையற்ற சாகசத்தைக் காட்டித் தன் விக்கெட்டைப் பறிகொடுத்தார். அவர் எடுத்த ரன் 37.

மலை கலங்கினும் நிலை கலங்காத மன உறுதியுடன் ஆடிய புஜாரா 231 பந்துகளில் சதத்தைக் கடந்தார். ரிஷப் பந்த் சிறிது நேரமும் (25) ரவிச்சந்திரன் அஸ்வின் நெடு நேரமும் (25) அவருக்குத் துணையாக நின்றார்கள். முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 250 ரன் எடுத்துச் சற்றே கவுரமான நிலையில் இருந்தது என்றால் அதற்குக் காரணம் புஜாராவின் ஆட்டம் மட்டுமே.

இந்திய அணி மட்டையாளர்களின் தற்கொலைக்கொப்பான ஆட்டமும் ஆஸி அணியினரின் கட்டுக்கோப்பான பந்து வீச்சும்தான் முதல் நாள் ஆட்டத்தின் முக்கிய அம்சங்கள். மறக்க முடியாத தருணம் என்றால் கல்லி முனையில் நின்றுகொண்டிருந்த உஸ்மான் கவாஜா இடது புறம் தாவி கோலியின் கேட்சை அபாரமாகப் பிடித்ததுதான்.

வியாழன், 6 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon