மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

கோவையில் நம்ம ஊரு சந்தை!

கோவையில் நம்ம ஊரு சந்தை!

பாரம்பரிய உணவுப் பொருட்கள் விற்பனை மற்றும் பிளாஸ்டிக் பயன்பாடற்ற வாழ்க்கை ஆகியவற்றை மையமாகக் கொண்ட ’நம்ம ஊரு சந்தை’ கோயம்புத்தூர் மாவட்டத்தில் டிசம்பர் 9ஆம் தேதி நடைபெறுகிறது.

இயற்கை உணவு, சிறு தானியங்களின் பயன்களை மக்களுக்கு உணர்த்துவதற்காக 'நம்ம ஊரு சந்தை' என்னும் அமைப்பின் மூலம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் சந்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாதத்துக்கான முதல் சந்தை வருகிற டிசம்பர் 9ஆம் தேதி, காந்திபுரம் வடகோவை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. திருப்பூரில் நடந்த சந்தையில் பெரும் வரவேற்பைப் பெற்ற சீர்தானிய மற்றும் பாரம்பரிய அரிசியில் செய்த இனிப்பு மற்றும் நொறுக்குத் தின்பண்டங்களுக்கான செய்முறைப் பயிற்சி வரும் ஞாயிறன்று நம்ம ஊரு சந்தையில் வழங்கப்படுகிறது.

தினை கருப்பட்டி அதிரசம், தினை லட்டு, முருங்கைக்கீரைக் கம்பு லட்டு, தேங்காய் பூ லட்டு, பாசிப்பயறு லட்டு, எள்ளு உருண்டை, நவதானிய லட்டு, கருப்பட்டி ஜிலேபி, இளநீர் முறுக்கு, செவ்வாழை முறுக்கு, கருப்பு கவுனி அரிசி தட்டுவடை, தேங்காய்ப்பால் முறுக்கு, சாமை மிளகு மிக்சர் உள்ளிட்ட தின்பண்டங்களுக்கான செய்முறைப் பயிற்சியை கரூர் கணேசன் மற்றும் திருப்பூர் சந்துரு ஆகியோர் வழங்குகின்றனர்.

காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையில் நடைபெறும் இச்சந்தையில் பாரம்பரிய அரிசி, சீர்தானியங்கள், மதிப்புக் கூட்டல் பொருட்கள், காய்கறிகள், பழங்கள், தின்பண்டங்கள், நாட்டுக் கோழி முட்டை, வாத்து முட்டை, மரச் செக்கு எண்ணெய், பனங்கருப்பட்டி, மூலிகைப் பொடி வகைகள், பனை ஓலைப் பொருட்கள், மர விளையாட்டுச் சாமான்கள், மண்பாண்டப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்படுகின்றன.

சூழல் நூல் அறிமுக நிகழ்வில் வந்தனா சிவா எழுதிய "உயிரோடு உலாவ” நூலை ஓசை சூழலியலாளர் அகிலா அறிமுகம் செய்துவைக்கிறார். அதோடு, கோவை அக்கு பஞ்சர் அகாடமி சார்பாக மரபு மருத்துவம் - சிகிச்சையும் ஆலோசனையும் வழங்கப்படுகிறது. குழந்தைகளுக்கான பாடல், கதை, நாடகத்துடன் விளையாட்டுப் போட்டிகளும் இச்சந்தையில் நடத்தப்படுகிறது. நிகர் கலைக்கூடத்தின் சிலம்பம், பறை இசை போன்ற நிகழ்ச்சிகளும் இச்சந்தையில் இடம்பெறுகின்றன.

வியாழன், 6 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon