மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 21 நவ 2019

அமைச்சரை விசாரணைக்கு அழைக்கும் சிபிஐ!

அமைச்சரை விசாரணைக்கு அழைக்கும் சிபிஐ!

குட்கா முறைகேடு வழக்கில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அவருடைய உதவியாளர் சரவணன் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டுமென சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

குட்கா ஊழல் முறைகேடு புகார் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்திவந்த நிலையில், கடந்த மாதம் சென்னை சிபிஐ முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் முதற்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில், அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டிஜிபி ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை. மேலும் குட்கா வழக்கை விசாரித்துவந்த சிபிஐ சூப்பிரண்டு கண்ணன், உதவி அதிகாரியாக இருந்த பிரமோத் குமார் ஆகியோர் மாற்றப்பட்டனர். கண்ணனுக்குப் பதிலாக சூப்பிரண்டு பாபு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

இவற்றிற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், “குட்கா ஊழல் வழக்கில் உரிய விசாரணை நடத்தப்பட்டு உண்மையான குற்றவாளிகள் அடையாளம் காட்டப்பட வேண்டும். இல்லையெனில் சரியான நீதியை அடைய உச்ச நீதிமன்றத்துக்கு சென்று வழக்கு தொடரவேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்படுவோம்” என்று சிபிஐ இயக்குநர் மற்றும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் ஆகியோரிடம் மனுவும் அளித்தது.

இந்த நிலையில் குட்கா ஊழல் வழக்கு தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள சிபிஐ, அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளது. விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனுக்கு ஏற்கனவே இரண்டு முறை சம்மன் அனுப்பியும் அவர் சிபிஐ முன் ஆஜராகவில்லை. இதனையடுத்து இறுதிக்கெடுவாக நாளை (டிசம்பர் 7) காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டுமென அவருக்கு சிபிஐ தரப்பிலிருந்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் நாளை காலை விசாரணைக்காக ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வியாழன், 6 டிச 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon